(எம்.ஏ.றமீஸ்)
ஒலுவில் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கடலரிப்பின் காரணமாக இப்பகுதியில் பல்வேறு பாதிப்புக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கடலரிப்பினால் தமது வாழ்வாதரம் உள்ளிட்ட குடியிருப்புக்கள், கரையோரப் போக்குவரத்து வீதிகள், தென்னந் தோப்புக்கள், மீனவ வாடிகள் போன்ற பல்வேறு இழப்புக்களை தாம் எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்களும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.
ஒலுவில் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள துறைமுக நிர்மாணப் பணி எதிர்காலத் திட்டமிடலின்றி அமையப் பெற்றதன் காரணமாகவே இவ் இழப்புக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலரிப்பின் காரணமாக ஒலுவில் துறைமுகத்தினை அண்மித்துக் காணப்படும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுக் காணப்படுவதுடன், ஒலுவில் பிரதேச மக்களுக்குச் சொந்தமான தென்னந் தோப்புக்களும், பயன்தரும் பல்வகை மரம் செடி கொடிகளும், பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும் கடலரிப்பின் காரணமாக கடலில் சங்கமித்துள்ளன.

துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஒலுவில் பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களின் தொழில் வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளதுடன், அம்மக்களின் வாழ்வாதாரமும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி மீனவ வாடிகள், பெறுமதி மிக்க கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றையும் இப்பிரதேச மக்கள் இழந்துள்ளனர்.

இப்பகுதியில் நிகழ்ந்து வரும் கடலரிப்பினைத் தடுக்கும் வகையில் பாறாங் கற்கள் குறிப்பிட்ட தூர நிலப்பரபற்கு இட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இக்கற்கள் முறையாகப் போடப் படாமையால் பாறாங்கற்கள் இடப்படாத பிரதேசம் வெகுவாக கடற் பரப்பில் காவு கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பினால் சுமார 500 அடிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு கடலுக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் ஒலுவில் பிரதேசத்தினை அண்டிய நிந்தவூர், அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளிலும் கடலரிப்பின் தாக்கம் தற்காலத்தில் பாரியளவில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் கடலரிப்பின் காரணமாக இப்பிராந்திய மக்கள் பாரிய ஆபத்தான சூழ்நிலையினை எதிர்நோக்க வேண்டி வரும் என இப்பிராந்திய மக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours