(தர்மா)
சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு விசேட கடமைக்கு வந்திருந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது பரீட்சார்த்தி மாணவர்களால் சரமாரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய தொழினுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. என். கே. மலலசேகர தலைமையில் கொழும்பில் இருந்து விசேட உயர் மட்ட நிபுணர்கள் குழு வருகின்றது.
இக்கல்லூரியின் கல்வியாண்டு 2019 இற்கு உரிய மட்டம் -05, 06 ஐ சேர்ந்த மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஒரு தொகை பரீட்சார்த்தி மாணவர்களால் பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் உதவி மேற்பார்வையாளர்கள் இருவர் ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்கள்.
தொழினுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்துக்கு பரீட்சை மேற்பார்வையாளர் குழு இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து உள்ளதுடன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பரீட்சைகளை அவர்களால் தொடர்ந்து நடத்த முடியாது என்று அறிய கொடுத்தும் உள்ளது.
இந்நிலையிலேயே தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன? பரீட்சைகளை இடை நிறுத்துவதா? தொடர்ந்து நடத்துவதாயின் எங்கு நடத்துவது? என்பன போன்ற விடயங்களை ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு வருகின்றது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு மாணவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் நிந்தவூரையும், மற்றவர் மருதமுனையையும் சேர்ந்தோர் ஆவர்.
Post A Comment:
0 comments so far,add yours