(எம்.ஏ.றமீஸ்)
இந்நாட்டில் ஜாதிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கட்சிகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதன் மூலமே இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் நிம்மதியுடனும் வாழ முடியும் என முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பி.எச்.பியசேன தெரிவித்தார்.

சமகால தனது அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிக்கும்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் இந்நாட்டில் பல்வேறான துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இழக்க முடியாத பல்வோறானவற்றையெல்லாம் இழந்திருக்கின்றார்கள். அதுபோன்று அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினரும் பல்வேறான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், சொல்லொண்ணா துயரங்களையும் அனுபவித்தும் வருகின்றனர்.

இவற்றுக்கெல்லாம்; இந்நாட்டில் உள்ள ஜாதிக் கட்சியே மூல காரணமாகும். இவ்வாறான ஜாதிக் கட்சிகளை நாம் ஆதரிக்கக் கூடாது. மக்கள் இவ்வாறான கட்சிகளை ஆதரிக்காது எம்மதியிலிருந்து விரட்டியடிக்கும் பட்சத்தில் தேசியத்துவத்துடன் நாம் இணைந்து செயற்படும்போது நாம் அனைவரும் நிம்மதியாக இந்நாட்டில் வாழ முடியும்.

சுதந்திர தினத்தின்போது தேசிய கீதத்தினை தமிழில் பாட முடியாதென்று ஓர் வாந்தியினை ஓர் தரப்பினர் பரப்பி வருகின்றனர். அரசாங்கம் அவ்வாறான எந்தவோர் முடிவினையும் எடுக்கவில்லை என மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றனது. இவ்வாறான குழப்பமுடைய கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி மக்களின் மனங்களை குழப்பும் முயற்சியில் சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துவதற்காக சூழ்ச்சிக்காரர்களின் சதிச் செயற்பாடாகவே இது உள்ளது. பல முனைகளிலும் இருந்து இவ்வாட்சியில் வெறுப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீய சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இவ்வாறான சக்திகளின் வலைகளில் மக்கள் வீழ்ந்து விடாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றவில்லை. மக்களைப் பலியிடுவதற்காகவே அவர்களின் பதவிகள் இருந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முதலில் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். தற்போது தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் போதவிட்டு குளிர்காயும் அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை நாட்டில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் வாழ வேண்டுமாக இருந்தால் இந்நாட்டில் சாதி மத பேதங்களை உண்டு பண்ணக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கும் கட்சிகளும், பாகுபாடுகளையும் பேதங்களையும் தூண்டி உணர்வுகளை மேலோங்கச் செய்து பிணக்குகளை ஏற்படுத்தக் கூடிய கட்சிகள் எம்மத்தியல் இருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

எமது இலங்கைத் திருநாடு பல்வேறு பட்ட வளங்களோடு, பல்லின மக்கள் செறிந்து வாழும் ஓர் நாடாகும். எமது நாட்டின் ஒற்றுமையினைக் குலைத்து குளிர்காய சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான சக்திகளின் தீய செயற்பாடுகளை நாம் முறியடிக்க வேண்டுமாக இருந்தால் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
எமக்குள் கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும், சண்டை சச்சரவுகளும் இருக்குமாக இருந்தால் எதிரணியினருக்கு அது தீனி போடும் செயற்பாடாக அமைவதோடு, எமது நாடு சீரழிந்து சின்னாபின்னமாவதற்கு வழிசமைத்துவிடும். அவலங்களும், ஓலங்களும் கடந்த காலங்களில் இருந்தது போல் இனியும் அதுபோன்றன இடம்பெறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை ஒன்று உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகளில் நாம் ஒவ்வொருவரும் இப்போதிருந்தே ஈடுபட வேண்டும்.

கல்முனைப் தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில் கடந்த காலத்தில் பெரும் பிரச்சினைகள் எழுந்தன. அவ்விடயம் ஓர் பிரச்சினையே இல்லை. அதனை இங்குள்ள ஜாதிக் கட்சிகளே ஊதிப் பெருப்பித்துக் காட்டியன. பிரச்சினைகள் இருந்தால்தான் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியும். அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால்தான் அவர்களின் அரசியல் அதிகாரம் நிலைத்திருக்கும். அதற்காகத்தான் நமது அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்கள் பகடைக்காய்களாக ஆக்கப்படுவதை நாம் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும்.
இப்பிரதேச செயலகம் அமைப்பது மிக மிக சிறியதோர் பிரச்சினை இதனை நம்மத்தியில் உள்ள சாதிக் கட்சிகளின் தலைமைகள் பூதாகரமாக மாற்றி பாரிய இனக்கலவரம் ஏற்படுவதற்கும் வழிகளைச் செய்திருந்தன. மக்கள் மத்தியில் சலசலப்புக்களையும் இனங்களிடையே முறுகல் நிலைகளையும் அவ்வப்போது இச்சாதிக் கட்சிகள் ஏற்படுத்தி வருவததை நாம் இனியும் கண்டு கொள்ளமால் இருக்க முடியாது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தூய எண்ணம் இல்லை. அப்பிரச்சினையை வைத்துக் காட்டாப்புக் காட்டுவதிலேயே அவர்களின் காலம் கடந்து செல்கின்றன. மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றார்களே தவிர மக்களுக்கான சேவையாளர்காக அவர்கள் இல்லை. ஒரே குடும்பத்தவர்கள் போல் வாழ்ந்து வந்த கல்முனை தமிழ் முஸ்லிம் மக்களை இன்று விரோதிகள் போலவும் சண்டைக்காரர்கள் போலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றமானது மிக வரவேற்கத் தக்க மாற்றமாகும். தற்போதுள்ள ஜனாதிபதி தூரதரிசனத்துடன் இலங்கை மக்களின் நன்மை கருதி துடிப்புடன் செயற்பட்டு வருகின்றார். இன்றுள்ள ஜனாதிபதிபோல் எந்தவொரு ஜனாதிபதியும் கடந்த காலத்தில் இருந்ததில்லை. இந்நாட்டில் நடைபெற்ற பாரிய யுத்த களத்தில் தன் உயிரைக் கூட துச்சமென நினைத்து போராடி நமது நாட்டை மீட்டிருக்கும் மிக உன்னதமான ஒருவராகும் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours