தாயக விடுதலை மண் மீட்புக்காய் போராடிய தமிழினம் இன்றைய ஆட்சியில் மண் அகழ்வை தடுக்க போராட வேண்டியுள்ளது என, மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மணல் அகழ்வை தடுக்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கு தாயக விடுதலையான மண் மீட்பு போராட்டத்தை கடந்த 70 வருடங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் தற்போது இராஜதந்திர ரீதியாகவும் நடத்தும் தமிழ் தலைமை தற்போது புதிய ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் மணல் கொண்டு செல்லும் அனுமதிப் பத்திரமுறை நிறுத்தப்பட்டதால் கண்டபடி வடக்கு, கிழக்குத் தமிழ் பிரதேசங்களில் பெருவாரியாக மண்வளம் சூறையாடப்பட்டு தென்பகுதிகளுக்கு கனரக டிப்பர் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
உள்ளூர் வியாபாரிகள் பணத்துக்காக நமது மண்வளத்தை விற்பனை செய்வதால் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை எதிர்நோக்கும் நிலை உள்ளது. அரசாங்கம் இதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் அல்லது குறிப்பிட்ட இடங்களை இனம் கண்டு அதற்கான அனுமதியை வழங்கினால் மட்டுமே மண்அகழ்வை தடுக்கமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் படுவான்கரை பெருநிலப்பகுதிகளில் பல இடங்களில் உள்ள நீரோடைகளும் வாய்க்கால் மற்றும் சிறு மதகு அண்டிய இடங்களில் இவ்வாறான மண் அகழ்வு தொடர்ந்தும் இடம்பெறுகிறது. இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் அக்கறை காட்டினாலும் தடுக்க முயற்சி எடுத்தாலும் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை மேற்கொண்டாலும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி மண் அகழ்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் வடமாகாணத்தில் மண் அகழ்வை தடுக்கக் கூறி பல கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர். தமிழ் மண்ணுக்கான போராட்டம் தமிழ்நில மண்வளத்தை காக்கும் போராட்டமாக மாறிவிட்டது என்றார்.

Post A Comment:
0 comments so far,add yours