துறையூர் தாஸன்
இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றியும் தமிழ் மக்கள் அபிவிருத்தி இன்றியும் இருக்கின்றபோது சம்பந்தரும் சுமந்திரனும் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இனியும் போலித் தேசியத்திற்கு தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாம்மான்) தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் இளைஞர் அணித்தலைவர் ஏ.யுவராஜ் தலைமையிலான மக்கள் சந்திப்பு பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றபோது(12) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மறைந்த பத்திரிகையாளர் சிவராம், தற்போதுள்ள ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் எனக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய நான் தலைவரிடம் சென்று சொன்னேன். அதன்பின்பே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. அன்று தலைவர் தலைமையில் நாங்கள் உருவாக்கிய கூட்டமைப்பு பதவியாசை, பண மோகம், கொள்கையில்லாத அரசியல்
போன்றவற்றால் இன்று சிதறி சின்னாபின்னமாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறது.
யுத்த காலத்தின்போது மிகவும் பாதிப்புக்குள்ளான மட்டு அம்பாறையினை முற்று முழுதாக அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே கட்சியின் நோக்காகவுள்ளது. பின்தங்கிய எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின்போது கணவன் உட்பட பிள்ளைகளை இழந்து இருப்பிடங்களை பாதுகாத்து துன்ப துயரங்களை அனுபவிக்கும் இளம் யுவதிகளும் தாய்மார்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கின்றது. தமிழர்களின் வாழ்வாதாரம் மேலோங்க வேண்டும் என நாங்கள் செயற்பட்டு வரும் வேளையில், காலம் காலமாக தமிழ்த் தேசியம் பேசிப் பேசி அப்பாவித் தமிழ் மக்களை,
கூட்டமைப்பிலுள்ளவர்கள் ஆசை காட்டி மோசம் செய்து வருகின்றனர்.
மட்டு. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு பல்வேறு தேவைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அரசாங்கத்தோடு சேர்ந்துதான் பெறவேண்டியுள்ளது. தமிழர்களுக்கென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை உருவாக்கி இரண்டரை வருடங்கள் ஆகின்றது. ஆகவே அதற்காக எம்மோடு சேர்ந்து எமது கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை இளைஞர், யுவதிகளுக்கு இருக்கின்றது. இப்போது அதிகமானவர்கள் நாளாந்தம் எம்மோடு வந்து இணைந்துள்ளார்கள். வெளியில் நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
கல்முனையில் தமிழ்க்கல்வி வலயத்தை உருவாக்க வேண்டுமெனில் எம்மிடம் இருக்கும் வாக்குப்பலத்தினை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்திலே கல்வியிலே சிறந்த முன்னேற்றகரமான மாவட்டமாக மட்டு, அம்பாறை மாவட்டத்தை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. அதற்கான அரசியல் அதிகாரத்தினை தமிழர்களாகிய நீங்கள்தான் பெற்றுத்தர வேண்டும். வாக்குப் பலத்தை ஒற்றுமையாக ஒரு அணியில் நின்று காட்டவேண்டும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக ஓரணியில் நின்றால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெறமுடியும். நான் மக்களோடு மக்களாக நிற்கிறேன். உங்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் கூடிய அக்கறை செலுத்துவேன். இங்குள்ள இளைஞர்களை நாம் வளர்க்கவேண்டும். தமிழர்களுக்கென இருக்கின்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை கட்டியெழுப்பவேண்டும். கூட்டமைப்பின் போலித்தேசியத்திற்கு பின்னால் சென்று ஏமாறவேண்டாம். எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தோடு சேர்ந்து எமது தேவைகளை பெறமுயற்சிக்க வேண்டும்.
கடந்த ஐந்து வருடம் பதினொரு ஆசனங்களை கைப்பற்றிய கூட்டமைப்பினர் ஏழு ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம்களுக்கு மாகாண சபையை விற்றனர். நாம் தமிழர் என்ற படியால் பல விடயங்களில் பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் .
13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல், வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஸ்டித்தீர்வு ஆகியவற்றை மக்கள் மத்தியில் பேசிப் பேசி ஏமாற்றி வருவதுடன், தொடர்ந்தும் தேசியம் பேசி தமிழ்மக்களை மாயையில் ஆழ்த்தியுள்ளனர். அவ்வாறான தமிழ்த்தேசியம் பேசும் அருகதை கூட்டமைப்புக்கு கிடையாது என்றார்.

Post A Comment:
0 comments so far,add yours