க.விஜயரெத்தினம்
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதிக்கப்பட்டோருக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் ச.அரவிந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை(22)ஊடக அறிக்கையை வெளியிட்டு கோரிக்கையை முன்வைத்தார்.

 
அவர் மேலும் தெரிவிக்கையில்..
உலகளாவிய ரீதியில் மிகவும் கடுமையாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஏற்கனவே பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வை மிகவும் சிரமத்தின் மத்தியில் நடாத்தி செல்லும் மாற்றுத்திறனாளிகள்,பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்,பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வை கொண்டு செல்வதற்கான அவசர உதவிகளை அரசும்,அரச சார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர்ந்த மக்களும் உதவ முன்வர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் 20,011 மாற்றுத்திறனாளிகளும், கிழக்கு மாகாணத்தில் 18,001 மாற்றுத்திறனாளிகளும் இருக்கின்றார்கள்.இவ்வாறான நிலையில் அவர்களில் கணிசமானவர்கள் முற்றிலும் உழைக்கும் வலுவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
கொரோனாவின் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மற்றும் பல்வேறு சமூகக் கட்டுப்பாடுகள் இருக்கின்ற நிலையில் அவர்களின் வாழ்வு,வாழ்வாதாரம் மிகவும் சிரமத்துக்குள்ளானதாகவே இருக்கின்றது.அதேவேளை பாதிக்கப்பட்டோர் சிறுசிறு வியாபார முயற்சிகளை முன்னெடுத்து தமது குடும்பத்தை நடாத்தி வருகிறார்கள்.அவ்வாறான வியாபார முயற்சிகளும் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.
இந்த நிலையில் அவர்களுக்கு நீண்ட காலமாக உதவிவரும் அரசும், புலம்பெயர்ந்த மக்களும் இம்முறை உதவிகளை இன்னும் சில மடங்கு அதிகரித்து மக்களின் மிகவும் கடுமையான காலப்பகுதிகளை கடந்து செல்வதற்கு உதவமுன்வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்வதோடு,
ஏற்கனவே அரசின் மாதாந்த கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு அரசு மாதாந்த கொடுப்பனவை அதிகரித்து ஒரு அவசர நிதியாக கொடுப்பதன் மூலமும் அதேவேளை அரச நிதி வழங்கலில் இதுவரை சேர்த்துக் கொள்ளப்படாதவர்கள் ஒரு அவசர நிலையை கருத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வழிவகைகளை செய்வதன் மூலமும் இந்தப் பெரும் துன்பமான காலத்தை கடப்பதற்கு உதவியாக இருக்க முடியும்.

அதேவேளை புலம்பெயர் உறவுகள் தாங்கள் இதுவரை காலமும் இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஒருபடி அதிகமாகவே உதவிகளைச் செய்து அந்த அமைப்பின் உறுப்பினர்களின் இந்த கடுமையான காலத்தை கடந்து செல்வதற்கு உதவி புரிய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அரச தரப்பினர் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்களுடன் பேசி அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு உதவிட வேண்டும்.
ஏலவே துன்பத்தில் நின்றுலலும் சமூகம் கொரோனாவின் கொடுமையையும் தாங்கித் தவிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours