குமணன்



                    

அம்பாறை மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுகின்ற இலட்சிய கனவுடனேயே வருகின்ற பொது தேர்தலில் போட்டியிடுகின்றார் என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பொறியியலாளர் தேசபந்து கலாநிதி கயான் தர்ஷன தெரிவித்தார்.

அம்பாறை கச்சேரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை நிறைவு பெற்ற பிற்பாடு நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து வளங்களும் நிறைவாக உள்ளன. பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதற்கான அத்தனை அம்சங்களையும் எமது மாவட்டம் கொண்டிருக்கின்றது. ஆனால் அபிவிருத்தி, வாழ்வாதார எழுச்சி ஆகியன எமது மக்களுக்கு வெகுநீண்ட தசாப்த காலமாக முறையாக கிடைக்காமலேயே உள்ளன.

 இதற்கு காரணம் குறுகிய சுய இலாப அரசியல்வாதிகளே ஆவர். அவர்கள் லீடர்களாக நடப்பதில்லை. டீலர்களாகவே நடக்கின்றனர். அவர்களுடைய சட்டை பைகளை நிரப்பி கொள்வதில் மாத்திரம் குறியாக உள்ளனர். இது இந்நாட்டின் சாப கேடு ஆகும்.எமது மண்ணையும் இதே கொரோனா கிருமிதான் பீடித்து வைத்திருந்து மக்களின் வாழ்க்கையை சாகடித்து கொண்டிருக்கின்றது.

நான் உங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு இம்மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக கட்டியமைத்து தருவேன். இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இம்மாவட்ட மக்கள் அனைவருக்கும் என்னால் ஆன உச்ச பட்ச சேவைகளை செய்வேன் . அதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனக்கு நீங்கள் வழங்குகின்ற ஒவ்வொரு வாக்குகளும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகின்ற துரும்பு சீட்டுகள் ஆகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகூடிய வாக்குகளை அம்பாறை மாவட்ட மக்கள் வழங்கி இருந்தனர். அதற்காக இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு வருகின்ற பொது தேர்தலில் அவருக்கு கிடைக்க உள்ள மகத்தான வெற்றியில் அம்பாறை மாவட்ட மக்களும் பங்காளிகளாக வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours