நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு  (சனிக்கிழமை) விஜயம்செய்த அவர், வன்னி மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “ஊடகவியாலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். பொதுவாக இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் ஊடகவியலாளர்களின் பொதுவான தேவைகளாகவும் பிரச்சினைகளாகவுமே இருக்கின்றன.

நாட்டிலுள்ள ஒவ்வொரு துறைகளையையும் வினைத்திறன் மிக்க சேவைத்துறைகளாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கமைய ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வேகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த போர்க் காலத்தின்போது வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளார்கள். அதற்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம்.

அத்துடன், முழுநேர ஊடகவியலாளர்களாகப் பணியாற்றும் பலருக்கு இருப்பதற்கு வீடுகள் இல்லை, கொடுப்பனவுகள் போதாமையாக இருக்கின்றன, காணிகள் இல்லை, வாழ்வாதார பிரச்சினைகள் இருக்கின்றன.

பலர் கையடக்கத் தொலைபேசிகளிலேயே செய்தியைச் சேகரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சரியான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அவை தீர்க்கப்பட வேண்டும்.

அந்தவகையில், ஊடகவியலாளர்களின் வசதி கருதி ஊடகக்கல்வி தொடர்பான திட்டங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான கல்வி, தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான திட்டங்களை நாம் வகுத்துக்கொண்டிருக்கிறோம்.

அத்துடன், காணி, வீட்டுத்திட்டம் வழங்கும்போது முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு அதனை வழங்குமாறு அரசாங்க அதிபர்களிடமும் பிரதேச செயலார்களிடமும் தெரிவிக்கவுள்ளோம். அந்தவகையில் எம்மிடம் விடுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours