(வவுணதீவு நிருபர்)



போதை ஏற்றப்பட்ட சமூகம் காலப்போக்கில் களியாட்ட சமூகமாகவும், கட்டுண்ட சமூகமாகவும் மாறி,ஈற்றில் மேலாதிக்கவாதிகளின் அடிமைச் சமூகமாவும் மாறிவிடும். 
என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் தெரிவித்துள்ளார்


அவர் வியாழக்கிழமை (29) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,

முதலாளித்துவ சக்திகளும் அதிகார சக்திகளும் எப்போதும் எதிர்காலவியல் சிந்தனையற்ற இயந்திரம் போன்ற உடலியல் ரீதியான தொழிலாளிகள், கூலிகள், அடிமைகளையே விரும்புகின்றனர். 

இதற்காக அவர்களைச் சிந்தியாத தொழிற்படைகளாகவும்,எடுபிடிகளாகவும் வறுமைக்கோட்டுக்குள் வைத்திருப்பதற்காக குடிபோதைப் பழக்கத்தினைப் பின்பற்ற வழிகோலுகின்றனர்,பழக்கியும் விடுகின்றனர்.

மலையகத் தோட்த்தொழிலாளர்கள், போடியாரகள் அல்லது நிலச்சுவாந்தர்களின் விவசாயக்கூலியர்கள் ஆகியோர் மேல்வர்க்கத்தினரின் பாரம்பரிய பரம்பரைகளின் உழைப்புத் தேவைக்காக குடிப்பழக்கதாரிகள் ஆக்கப்பட்டு  வறுமையுடன் வாழ்விக்கப்படுகிறார்கள்.இப்படியாக மாற்றப்பட்ட தாழ்வு மனப்பான்மை மிக்க அடிமைப்பாங்கான சமூகம் உரிமைகளை மறந்து, சலுகைகளுக்காக விலையாகிவிடும்.

இவர்களை மேலாதிக்கவாதிகள், அடிப்படைவாத அதிகார வர்க்கத்தினர் பணத்தாலும்,பானத்தாலும்(மது) இலகுவாக ஏமாற்றித் தமது காரியங்களைச் சாதித்து விடுவார்கள்.பேரின அடிப்படைவாதிகள் இந்த அபதந்திரத்தைத் தேரதல் காலங்களில் சாதுரியமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் எமது தமிழ் மறவர்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்து சகாக்களை வழிப்படுத்தினார்கள். இவ்விடயத்தில் நமது உண்மையான தமிழரின் வழிகாட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளம் சமூகத்தை இலகுவாக நாசமாக்கி விடலாம்.பின்னர் அவர்களை மீட்டெடுப்பதென்பது முடியாத காரியமாகிவிடும்.வடக்கில் யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அல்லது உருவாகியுள்ள ஆவாக்குழு,வாள்வெட்டுக்குழு,கஞ்சாக்குழு என்பன அங்குள்ள தமிழர்களின் பாரம்ரியக் கொடையான ஒழுக்ககப் பண்பாட்டினைத் திட்டமிட்டுச் சிதைத்து நாசமாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்டவையாகும்.இதற்காக யுத்தத்தின் பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அதிகளவான சாராய விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதேவேளை சட்டவிரோதமான போதைப் பொருட்களும் சட்டத்திற்கு அப்பால் தாராள மயமாகியுள்ளன.இதனால் பாடசாலைச் சிறார்கள் கூட பாழாகும் நிலைமை உருவாகியுள்ளது.சட்டவிரோத கெறோயின் வணிகத்தின் பரிவர்த்தனை நிலையமாக அல்லது களமாகக் கொழும்பு விளங்குகின்றது.வடமாகாணம் கேரளாக் கஞ்சாவின் கடத்தல் பிரதேசமாக மாறி வருகிறது.30 வருடகால யுத்தத்த காலத்தில் இப்படியான போதைவஸ்துக் கலாசாரமோ,ஆவாக்குழு,வாள்வெட்டு அடாவடித்தனங்களோ இருக்கவில்லை.அப்படியென்றால் இப்படியான சமூகவிரோத வன்மங்கள்,சீரழிவுகள் எப்படித் தோன்றின? யாரால் தோற்றுவிக்கப்படுகின்றன? இவை ஏன் தொடர்கின்றன? இவை ஏன் முடிவுக்கு வரவில்லை? என்ற நியாயமான கேள்விகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுகின்றன.தமிழர் பண்பாட்டைச் சீரழிக்கின்ற மறைகரங்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.தமிழ் தேசிய அரசியல் நிலையியலைச் சீர்குலைப்பதற்காக நுட்பமான ஊடுருவல்கள் மூலமாக உளவாளிகள்,தரகர்களை நுழைக்கின்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.இவர்கள் பணியாளர்கள்,ஆதரவாளர்கள்,ஊடகர்,வேட்பாளர் போன்ற இன்னோரன்ன  வடிவங்களில் ஊடுருவியும் கொள்கின்றனர்.

இவ்வாறானவர்கள் உள்ளிருந்து கொண்டு முக்கியமான தகவல்களைத் திரட்டி முகவர்களுக்கு அனுப்புகின்றனர்.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக்கட்சிகள்,தமிழ் தேசிய உணரவாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.உதவுகின்றவர்களாக நுழைந்து பின்னர் உபத்திரம் செய்கின்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.ஓர் இனத்தின் அழிவு என்பது பல வழிகளின் ஊடாக நடைபெறுகின்றன.மக்கள் அழிப்பு,கலாசார அழிப்பு,வரலாறுகளின் அழிப்பு,நில அபகரிப்பு,பொருளாதார அழிப்பு,கல்வி அழிப்பு,தன்னம்பிக்கை அழிப்பு,ஆளுமை அழிப்பு என்று பல பரிமாணங்களில் நடைபெறுகின்றன.விழிப்பாய் இருந்தால் மட்டுமே மக்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும். என குறிப்பிட்டுள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours