நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்களின் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட மறு அறிவித்தல் வரையில் வர்த்தக நிலையங்களை தினமும் மாலை 07.00 மணிமுதல் மூடுவது எனும் தீர்மானத்திற்கு அமைய கல்முனை பிராந்தியத்தின் கீழுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நேற்றிரவு 07.00 மணிமுதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்களும் பிராந்தியத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கினர். நாட்டில் பரவலாக உள்ள கொரோனா அலையை கட்டுப்படுத்த பண்டிகை காலம் என்பதனால் சுகாதார துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் இந்த முன்னெடுப்பு நடைபெற்று வருகிறது.

சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அல்-அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தாரின் மேற்பார்வையில் நேற்றிரவு சாய்ந்தமருது பஷார் மற்றும் உள்ளூர் வர்த்தக நிலையங்கள் கொவிட்-19 வைரசினை முன் கூட்டியே கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அனைத்து கடைகளும் இரவு மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த களவிஜயம் மேற்கொண்டனர்.  இந்த விஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர் குழுவும் கலந்து கொண்டனர். அது போன்றே ஏனைய பிரதேசங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours