( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மாநகரின் மத்தியிலுள்ள பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் பணிமனைகருகாமையிலுள்ள கல்லடிக்குளம் எனும்  பிரபலமான நீர்ப்பாசனக்குளத்தினுள் மலசலகூடக்கழிவுகள் கொட்டப்பட்டிருக்கிறது.

இச்சம்பவத்தை அறிந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்திற்கு நேரடியாக விரைந்து கழவுகள் கொட்டப்படுகையில் கையும் மெய்யுமாக பிடித்து அமர்க்களப்படுத்தினார் .

சம்பவம் பற்றித்தெரியவருவதாவது:
கடந்த மூன்று தினங்களாக கல்முனை மாநகரசபைக்குச் சொந்தமான  களிசக்கர் வவுசர் அவ்விடத்தில் மலசலகூடக்கழிவுகளை கொட்டிவருவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று அதனை கையும் மெய்யுமாக பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன்இ கந்தசாமி சிவலிங்கம் ஆகியோர் ஊடகவியலாளர்களுடன் தயாராகவிருந்தனர்.

இருப்பினும் தகவல் கசிந்ததோ என்னவோ அவர்கள் வரவில்லை.அதனால் இவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனினும் முயற்சியைகைவிடாது உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மீண்டும் ஒரு மணிநேரத்தின்பின்னர் அங்கு சென்றதும் குறித்த வவுசர் மருதமுனைப்பக்கமிருந்து  மலசலகூடக்கழிவுகளைக் கொண்டுவருவதைக்கண்டார். உடனே ஊடகவியலாளர்களுக்கு அறிவித்து வரவழைத்து வீடியோ புகைப்படங்களை பதிவுசெய்தார்.

கல்முனை நகரின் மத்தியிலுள்ள  கல்லடிக்குளமானது கல்முனைக்கண்டத்தின் 413ஏக்கர் வயல்காணிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் பாரிய குளமாகும்.
 அவ்வயல்காணிகளின் வடிச்சல் கிட்டங்கி ஆற்றினுள் பாய்கிறது. அத்தகைய குளத்தினுள் இம்மலசலகூடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மீனவர்கள் தொடக்கம் மக்கள்வரை பாரிய சுகாதாரசீர்கேட்டை எதிர்கொள்வதற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஸ்தலத்திலிருந்து உறுப்பினர் ராஜன் தொலைபேசி மூலம் மாநகரசபையின் வைத்திய சுகாதார அதிகாரி அர்சாத் காரியப்பரை சம்பவ இடத்திற்கு அழைத்து ஆதாரத்துடன் தெரியப்படுத்தினர். பொதுமக்களும் விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அத்தருணம் அந்த இடத்தில் நின்ற சாரதி மெதுவாக நகர்ந்துவிட்டார்.பின்னர் கிளினர் வவுசரை ஓட்டிக்கொண்டுசென்றதை அவதானிக்ககூடியதாகவிருந்தது.

ஊடகவியலாளர் மத்தியில் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் கந்தசாமி சிவலிங்கம் ஆகியோர் கருத்துரைத்தனர்.

மனித கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அந்த கழிவுகளை மீன்கள் உண்பதனால் மீன் சாப்பிட முடியாத நிலையும் ஏற்படும். கல்முனை மாநகர மேயர் இந்த நடவடிக்கையை உடன் நிறுத்தி மாற்று வழியை செய்ய வேண்டும் என மாநகர சபை உறுப்பினர்களான  சிவலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

கல்முனை மாநகர சபை முதல்வரை இது தொடர்பில் பேச பலதடவைகள் முயற்சித்தும் பயனளிக்கவில்லை என்றும், தங்களை புறக்கணிக்கும் விதமாகவே அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இது இனவாத,பிரதேச வாத ரீதியாக பார்க்கும் விடயமல்ல. இது மக்களின் பொதுவான பிரச்சினை. விவசாயிகள் எங்களுக்கு முன்வைத்த தகவலையடுத்ததே நாங்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.

நாடு போக்குவரத்து முடக்கத்தில் இருக்கும் இந்த காலத்தில் இவ்வாறு மனித மாண்புக்கு பொருத்தமில்லாது செய்யப்படும் செயலினால் கல்முனை நகரில் கொட்டப்படும் இந்த இடத்துக்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபை, பொது நூலகம், பஸ்தரிப்பு நிலையம்,பொலிஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை என்பன உள்ளது. இதில் ஏறத்தாழ 200க்கு மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் உட்பட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும் கேட்டுக்கொண்டார்கள்.

ஏலவே கல்முனை மாநகரசபைக்குட்பட்ட மலசலகூடக்கழிவுகளை அகற்றும் பணியை தனியார் ஒருவரிம் வழங்கப்பட்டது. அவர் சாய்ந்தமருதில் அக்கழிவுகளை கொட்டிவருவது தொடர்பாக பல தடவைகள் பல உறுப்பினர்களால் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours