(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் நேற்று மாலை சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதுடன், மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அரசினால் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை பதுக்கி வைத்திருந்த நபர்களே மாவட்ட குற்ற விசாரனைப் பிரிவினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை விசேட பொலிஸ் பிரிவினரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது  இடம்பெற்றுள்ளதுடன், மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர் .

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், மாமாங்கம், கூழாவடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது 180 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 307 சாராய போத்தல்களும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவுள்ள 8 சாராய போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours