(எம்.ஏ.றமீஸ்)

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள் இன்று(03) முதல் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்து வருகின்றமையால் இப்பிரதேசத்தினை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களுக்குள் இப்பிரதேசத்தில் 47 கொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் இப்பகுதியில் கொவிட் தொற்று நிலை காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ள நிலையிலேயே இப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்று நிலை பரம்பலின் மூன்றாம் அலையின் போது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இம்மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க குறைந்த எண்ணிக்கையானோரே தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றின் பரம்பல் அதிகரித்துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான முடக்க நிலையினை அமுல்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் இப்பிராந்தியத்தில் புதிதாக 20 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒன்பது தொற்றாளர்களும், காரைதீவு பிரதேசத்தில் நால்வரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் மூவரும், கல்முனை வடக்கு, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும் இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours