(க.விஜயரெத்தினம்)

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74வது சிரார்த்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அந்தவகையில் கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டத்துடன் ,புலனம்(Zoom)தொழிநுட்பம் மூலம் நினைவுப் பேருரையும் நடைபெற்றது.

சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சிவானந்தா வித்தியாலய அதிபர் ந.சந்திரகுமாரின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து,பாடல் பாடி ஜனனதின நிகழ்வுகள் சுகாதார முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மு.பவளகாந்தனின் தலைமையில்
மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையின் மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ''வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ'' எனும் பாடலும் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours