(மட்டக்களப்பு விசேட நிருபர்)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பாரிய பிரச்சனையாக அமைந்துள்ள பொலித்தீன் பாவனையினை அடிப்படையாக கொண்டு பொலித்தீன் கழிவுகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
ஏஜீசி இனோவேட் பிரைவட் லிமிற்ரெட் நிறுவனத்தின் நிபுணர் குழுவினர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விஜயத்தின் போது மாநகர சபையின் ஆணையாளருடன் இடம்பெற்ற பொலித்தீன் கழிவுகளை மீள்சுழற்சி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலின் பின்னர் திருப்பெருந்துறையில் உள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான மீள்சுழற்சி மையத்திற்கு சென்று அங்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்கான முறைகளையும், குறித்த பொலித்தீன் கழிவுகளை கொண்டு தார் உற்பத்தி மேற்கொள்ளுவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன், குறித்த திட்டத்தினை மேற்கொள்ளும் முறைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஏஜீசீ இனோவேட் பிரவேற் லிமிட்ரெட் நிறுவனத்தின் நிபுணர் குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் கழிவுகளை அம்பாறையில் காணப்படும் குறித்த நிறுவனத்தின் மீள்சுழற்சி நிலையத்திற்கு கொண்டு சென்று மீள்சுழற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் திட்ட முன்மொழிவினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த செயற்திட்டம் தொடர்பில் மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தெரிவிக்கையில், குறித்த செயற்திட்டத்தின் மூலம் பொலித்தீன் கழிவுகளை குறித்த நிறுவனத்தினருக்கு விற்பனை செய்வதனால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருமானத்தை பெறக்கூடியதாக உள்ளத்துடன், கழிவுகளை சேகரிக்க விரையமாகும் பண விரையத்தை கட்டுப்படுத்த கூடியதாகவும், சூழலில் உள்ள கழிவுகளை குறைக்கக்கூடியதாக அமைவதுடன் பொதுமக்களிடமிருந்து பணத்தை கொடுத்து குறித்த கழிவு பொருட்களை தரம்பிரித்து வாங்கக்கூடியதாக அமையும் இதனால் சூழல் அழகுபடுத்தப்படுவதுடன், தூய்மையாகவும் காணப்படும் என தெரிவித்தார்.
குறித்த செயற்திட்ட ஆராய்வு நடவடிக்கையில் மாநகர பிரதி ஆணையாளர் மற்றும் ஏசீஜீ இனோவேட் பிரவேற் லிமிட்ரெட் நிறுவனத்தின் நிபுணர் குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours