( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் ,தொடரும் கொரோனாப்பீதியால் பொதுமக்கள் சுயமாகவே பொதுப்போக்குவரத்தை குறைத்துவருகிறார்கள். வீதிகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துவருகின்றது. பஸ்களில் ஓரிருவரையே காணமுடிகின்றது.

ஊரடங்குச்சட்டம் பற்றி, பொதுமக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவர்களாகவே அடங்கி முடங்கிவிடுவதைக்காணக்கூடியதாயுள்ளது. ஊரடங்கு விடயத்தைவிட விலைவாசி ஏற்றமே பேசுபொருளாக அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

பால்மா ,காஷ் போன்றவற்றை சற்றும் காண முடியாத நிலை. மேலும், சீனியின்விலை 160ருவாவுக்கு மேல் எகிறிச்செல்கிறது. ஏனைய அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் பற்றியே மக்கள் தமக்குள் பொதுவாக பேசிக்கொள்கிறார்கள்.

அண்மைக்காலமாக ,அம்பாறை மாவட்டத்தில் கொரோனாத்தொற்று படுவேகமாக பரவிவருகிறது.தினம்தினம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துவருகிறது. மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

கல்முனைப்பிராந்தியத்தைவிட அம்பாறைப்பிராந்திய நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாக மாறிவருகிறது.நேற்று முன்தினம் இடம்பெற்ற டிசிசி கூட்டத்திலும் இதுவிடயம் பேசப்பட்டது.

பெரும்பாலானவர்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் சுயமுடக்கத்தைக்கடைப்பிடித்து வருகிறார்கள். அவசியமாக வெளியே சென்றாலும் மறுகணம் வீடுதிரும்பிவிடுகிறார்கள்.

மொத்தத்தில், இனம்புரியாத ஓர் அமைதிநிலை நிலவுகிறது. புயலுக்கு முந்திய அமைதியா? என்ற நியாயமான  அச்சமும் நிலவுகின்றது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours