இ.சுதா
நினைவேந்தல்களை வடகிழக்கு தமிழர் பிரதேசங்களில் தடை செய்வது மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆதங்கம்
வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கின்ற நினை வேந்தல்களை தடை செய்வதில் அரசாங்கம் பொலிஸாரை முன்னிலைப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை வடகிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களுக்கு நினைவு கூர்வதற்கு பொலிஸார் தடை உத்தரவு வழங்கியுள்ளனர்.இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நினை வேந்தல்களுக்கு தடை விதிக்கப்பட வில்லை ஆனால் தற்போதைய அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தமிழர்களின் உணர்வுகளை அடக்கி ஆழ்கின்றமை ஜனநாயகத்திற்கு விடுக்கின்ற சவாலாகும்.இலங்கை ஜனநாயக நாடு என மார்வினைத் தட்டிக்கொள்கின்ற அரசாங்கம் தமிழர்களின் உணர்வினை அடக்கி ஒடுக்குவது வேடிக்கையானது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை காரணம் காட்டி நினைவேந்தல் நிகழ்வினை தடை செய்யும் அரசாங்கம் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நிகழ்வுகளின் போது பொது மக்களையும் பொது அமைப்புக்களையும் அழைத்து அரசியல் களம் அமைக்கின்ற போது கொரோனா தாக்கம் ஏற்படாதா என்ற வினா எழுகின்றன.இதற்கான பதிலை அரசாங்கத்தினால் வழங்க முடியாது.
தென்னிலங்கையில் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் பொலிஸார் வடகிழக்கு பிரதேசங்களில் உணர்வு பூர்வமான நிகழ்வினை தடைசெய்வது ஜனநாயகமா? இல்லை இது தமிழர் உணர்வுகளை நசுக்கும் செயற்பாடாகும்.
வடகிழக்கில் நீதிக்காக குறல் கொடுத்த ரெலோ கட்சியின் மூத்த தலைவர் குட்டிமணி உட்பட அவர்களின் சக போராளிகளும் வெளிக்கடை சிறைச்சாலையில் 1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர்களின் 38ஆவது நினைவு தினத்தினை அஞ்சலி செலுத்துவதற்கு வடகிழக்கில் அரசாங்கம் பொலிஸாரின் உதவியோடு தடை உத்தரவினை வழங்கியது.இ வ்வாறாக பல விடயங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை பட்டியல் படுத்த முடியும்.என்றார்

Post A Comment:
0 comments so far,add yours