(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

பெரும்போகத்தில் 40 ஆயிரம் வீட்டுத் தோட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கத் தெவையான விதைப் பொதிகள் கமநலசேவைத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.


அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டுத் தோட்டம் எனும் தொனிப்பொருளின்கீழ் விவசாய அமைச்சினால் நாட்டில் 1.2 மில்லியன் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் இடம்பெற்றுவருகின்றது. 

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரம் வீட்டுத் தோட்டங்களை கிராமப்புரம் மற்றும் நகர் புரங்களிலும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விவசாயப்பிரிவு, கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஆகியன இணைந்து செயற்படுத்தி வருகின்றது. 


இதில் முதற்கட்டமாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் வழிகாட்டலில் 25 ஆயிரம் விதைப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கமநல சேவைகள் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது இவ்விதைப் பொதிகளை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஹலீஸ், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாதிடம் கையளித்தார். 


மட்டக்களப்பு கரடியனாறில் அமைந்துள்ள விதை உற்பத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பெறப்பட்ட இவ்விதைப் பொதிகள் இப்பிரதேசத்தில் பயிற்செய்கைக்கு மிகவும் பொருத்தமானது என மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ் தெரிவித்தார்.


எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தேசிய ரீதியாக இவ்வேலைத்திட்டம் விவசாய அமைச்சினால் கண்டி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதேவேளை நவம்மபர் 1ம் திகதி முதல் 7ஆந் திகதிவரை சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியில் இவ்விதைப் பொதிகள் குறித்த கமநல சேவைப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு பயிர் செய்கையும் இடம்பெறவுள்ளது.


இப்பயிர் செய்கைக்கான தொழினுட்ப ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் விவசாய விரிவாக்கல் பிரிவு வழங்கவுள்ளது. இவ்வீட்டுத்தோட்ட செயற்றிட்டத்தினூடாக பொதுமக்களின் நுகர்வுத் தொகையில் ஒருபகுதியை நிவர்த்தியாக்குவதுடன் பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours