(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகற்றல் நடவடிக்கையையும் மேம்படுத்துவதற்கான அனுசரணையை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனம் (யூ.என்.டி.பி) (UNDP) முன்வந்துள்ளது.

இத்திட்டம் தொடர்பான துறைசார் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (05) கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் துறைசார் நிபுணர்களான பொறியியலாளர் கலாநிதி ஏ.ஜி.ரி.சுகதபால, பொறியியலாளர் காமினி சேனநாயக்க, பேராசிரியர் பராக்ரம கருணாரட்ன, டொக்டர் எல்.ஜீ.ரி.கம்லத், பொறியியலார் ரஞ்சித் பத்மசிறி, சுற்றுச்சூழல் நிபுணர் சம்பத் ரனசிங்க, யூ.என்.டி.பி. நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் ஷாமிர் ஷாலிஹ் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான விஞ்ஞான, தொழில்நுட்ப பொறிமுறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் திண்மக் கழிவு மற்றும் மருத்துவக் கழிவு என்பவற்றை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னோடித் திட்டத்திற்கமைவாக முதற்கட்டமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் மொனராகல மாவட்ட பொது வைத்தியசாலை என்பனவும் அதனோடிணைந்ததாக கல்முனை மாநகர சபை மற்றும் மொனராகல பிரதேச சபை என்பனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours