( -க.விஜயரெத்தினம்)
நிலவளம்,நீர்வளம்,மனிதவளம் என அனைத்து வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ள போதும் கிழக்கு மாகாண தமிழர்கள் தொடர்ந்தும் அனைத்து தேவைகளுக்கும் அரசியல்,பொருளாதார இருப்புக்களுக்கும் ஏனையோரை நம்பி வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்
வவுணதீவு பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிளை குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை(25)கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்....
ஆனால் தமிழர்களிடமிருந்து 60 வருடங்களாக வாக்குகளைப் பெற்ற அரசியல் தலைமைகள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்காத போதும், தமிழர்களினை தொடர்ந்தும் அடிமைகளாக மாற்று அரசியல் தலைமைகளிடம் கையேந்தி நின்ற சூழலையும், வாழ்வாதாரத்திற்காக தங்களது வளங்களை பயன்படுத்த முடியாத சூழலையும் உருவாக்கி இருந்தார்கள்.அதுவே இன்று வறுமையில் வவுணதீவு பிரதேசம் முதன்மை இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.
தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற இயந்திரங்களாகவும்,தங்களது அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவும்,காலம் காலமாக ஏற்படுகின்ற முரண்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் குளிர்காயும் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இருக்கின்றார்கள் என்பது மக்களுக்கு தெளிவாக இருக்கின்றது.தற்போதய அரசியல் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது மக்களின் எதிர்கால இருப்பை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் இருப்பை நிலைப்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றார்.இந்த சூழலை எமது சமூகமும் பயன்படுத்தி எதிர்காலத்தில் வலுவான சமூகமாக தமிழ் சமுகம் மாறுவதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours