நூருள் ஹுதா உமர் 


கல்முனை மாநகர எல்லையில் உள்ள வடிகான்களை சுத்தப்படுத்துமாறு அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் சார்பிலான மாநகர சபை உறுப்பினர் எம். சிபான் பஹுறுத்தீன்  கோரிக்கை ஒன்றை கல்முனை மாநகர சபை முதல்வருக்கு விடுத்துள்ளார். நேற்று அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், இயற்கையின் பருவகாலங்களில் மீண்டுமொரு மாரி காலத்தினை நம் கல்முனை மாநகரம் எதிர்நோக்க உள்ளதனால், கல்முனை மாநகரம் முழுவதிலும்  காணப்படுகின்ற வடிகான்களை சுத்தப்படுத்த வேண்டிய தேவை அத்தியவசியமானதாக உணரப்படுகிறது.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை வடிகான்களை சுத்தப்படுத்தும் வேலையை மாரி காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே செவ்வணே செய்திருந்தமையால் பாரிய வெள்ள அனர்த்தத்தில் இருந்து எமது மாநகர மக்களும், மாநகர சூழலும் பாதுகாக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே. இதற்காக மாநகர மேயருக்கும், பிரதம சுகாதார வைத்திய அதிகாரிக்கும், சுகாதார குழுவுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் மாநகர மக்கள் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்துவரும் கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக கல்முனை மாநகர சபை பகுதிநேர ஊழியர்களை தக்க வைப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அறியமுடிகின்றது. இருப்பினும் மாநகர மக்களையும் இந்த கோவிட் காலத்தில் வெள்ள அபாய இடர் நிலைக்கு ஆளாக்குவதற்கும் கல்முனை மாநகர சபை இடமளிக்கக்கூடாது.

ஆகவேதான் மிகவும் விரைவாகவும் வினைத்திறனாகவும் வடிகான்களை சுத்தப்படுத்த வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே மாநகர மேயர், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார குழுமத்தினர் இந்நிலையில் கூடிய கவனம் செலுத்தி வடிகான்களை சுத்தப்படுத்தி மாநகர மக்களின் இடர் போக்க முன்வரவேண்டும் என எம். முகம்மட் சிபான் பஹுறுத்தீன் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours