நூருல் ஹுதா உமர்


பிரதான முஸ்லிம் கட்சிகள் எல்லாம் இரட்டை வேடம் கொண்டவை எனும் உண்மையை பலவருடங்களாக நாங்கள் கூறிவருகிறோம். நாங்கள் எப்போதும் உண்மைகளை மட்டுமே மக்கள் மத்தியில் கூறிவருகிறோம். மயிலாக இருந்தாலும் சரி மரமாக இருந்தாலும் சரி கடந்த காலங்களில் கடுமையாக மஹிந்த அரசை விமர்சனம் செய்தார்கள். இப்போது அவர்கள் எல்லோரும் ராஜபக்ஸ அரசுக்கு சார்பானவர்களாக இருப்பதை வரவேற்கிறோம். அவர்கள் அரசுக்கு சார்பானவர்களாக இருந்தால் தான் பாராளுமன்ற கதிரைக்கும், எமது சிறுபான்மை சமூகத்திற்கும் ஏதாவது நன்மை கிடைக்கும். சிறிய சமூகமாக வாழும் நாம் பெரும்பான்மை இன மலைகளுடன் மோத முடியாது. கடந்த காலங்களில் அஸ்ரப் அவர்களும் எதிரணி அரசியலிலும் ஜனாதிபதி பிரேமதாசாவை ஆதரித்து புதிய பரிணாமத்தை காட்டினார் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் பிரதித் தலைவருமான சல்மான் வஹாப் மற்றும் கட்சியின் கல்குடா தொகுதி ஆலோசகர் முஹம்மத் ஹக்கீம் ஆகியோர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வை தொடர்ந்து கட்சியின் தலைமையகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களுக்கு அரசினால் அபிவிருத்தி திட்டங்கள், தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதுடன் முஸ்லிங்களின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான சலுகைகளை பெற்ற ஹக்கீம், றிசாத் போன்றோர்கள் பின்னர் வந்த நாட்களில் கொப்புத் தாவினர். இந்த சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது.

மு.கா தலைவரின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்திற்கு பிழையானவை என்பதை உணர்ந்த மக்கள் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை பகிரங்கமாக துரோகியென விமர்சிக்கின்றனர். அவரது துரோகத் தனங்களை நாங்கள் எப்போதோ பட்டியலிட்டு விட்டோம். இப்போது தான் மக்களுக்கு அது விளங்கியுள்ளது. முஸ்லிம் கட்சியின் தலைவர் படை பட்டாளங்களுடன் வரவேண்டிய காலம் மலையேறி இப்போது கோழித்திருடன் போல கிழக்குக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹக்கீம் போன்றவர்கள் மக்கள் தங்களுக்கு வழங்கிய அமானிதத்திற்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுடன் மக்களும் இவ்வாறான ஏமாற்று தலைமைகளை நிராகரித்து நிதானமான அரசியல் கலாச்சாரத்தை உண்டாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேலும் பதிலளித்த அவர், மாகாண சபை தேர்தல் தேவையற்ற ஒன்றாகும். அதன் மூலம் இனவாதம், பிரதேசவாத, குழுவாத, பிரச்சினைகள் தொடர்ந்தும் உருவாகி வருகிறது. இப்போதே கிழக்கு முதலைச்சர் யார் எனும் போட்டி ஆரம்பித்து விட்டது. முதல்வர் சிங்களவரா? தமிழரா? முஸ்லிமா? முதலமைச்சு அம்பாரைக்கா? மட்டக்களப்புக்கா? அல்லது திருகோணமலைக்கா ? எனும் போர் ஆரம்பித்து கதையாடல்கள் தொடங்கி விட்டது. இவைகள் எமது நாட்டுக்கு பொருத்தமற்றது. நாட்டின் பொருளாதாரம் கொரோனாவினால் கடுமையாக வீழ்ந்துள்ளதுடன் வெளிநாட்டு இறக்குமதிகள் இல்லாமையினால் விலைவாசியும் கடுமையாக ஏறியுள்ளது. இதனை நுணுக்கமாகவும், நுட்பமாகவும் அரசியல், பொருளாதார திட்டமிடலை செய்யும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ விரைவில் சீர்செய்து நிரந்தர தீர்வை கொண்டுவருவார் என்று நம்புகிறோம் என்றார்.
 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours