(மட்டக்களப்பு விசேட நிருபர்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் என்று பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி விஷேடமாக கணியம் அதேபோன்று மீன் வளர்ப்பு இறால் வளர்ப்பு சம்பந்தமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் நீரியல் பூங்கா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் இருக்கும் மீன், நண்டு, இறால் வளர்க்கக்கூடிய இடங்களை சரியாக அடையாளப்படுத்தி,  முயற்சியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளித்து, அதேபோன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவழைத்து முதலீட்டை அதிகரித்து, இதன் ஊடாக வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த வருட இறுதிக்குள் இவற்றை இடம்பெறச் செய்வது என்றும் அதிலும் விசேடமாக அதிகூடிய வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதோடு உள்நாட்டிலுள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அதற்கான ஆரம்ப பூர்வாங்க வேலைகளை எப்படி செய்வது என்றும் தேவையான துறை சார்ந்த அனுமதிகளையும் அல்லது சட்ட ரீதியாக உள்ள நடைமுறைகளை பின்பற்றி விரைவுபடுத்தி அதற்கான ஆவணங்களை அபிவிருத்தி குழுவிற்கு சமர்ப்பிக்க தீர்மாணித்துள்ளோம் என்றார்.

குறித்த கலந்தரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours