மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்


முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கூறும் அரசும் அதனுடைய நீதி அமைச்சர் சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்ரியும் எவ்வாறான திருத்தம் கொண்டு வரப்போகின்றார்கள் என்பதனையோ அல்லது ஒட்டு மொத்தமாக இருபது லட்சம் முஸ்லிங்கள் இந்த நாட்டிலே இரு நூற்றாண்டுகள் கடந்து அனுபவித்து வருகின்ற உரிமையினை குழிதோண்டிப் புதைத்துவிடுகின்ற நடவடிக்கைகளிலே இறங்கியிருக்கின்றார்களா? என்பதனை இன்னுமும் அம்பலப்படுத்தாமல் மூடு மந்திரம் போட்டு வைத்திருக்கிறார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம். சிபான் பஹுறுத்தீன் குற்றம் சாட்டி பேசினார்.

செவ்வாய்க்கிழமை (26) மாலை கல்முனை மாநகர மாதாந்த அமர்வு முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிபின் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றோசன் அக்தரினால் முன்மொழியப்பட்ட முஸ்லிம் சட்டத்தினை மாற்றீடு செய்கின்ற அல்லது திருத்துகின்ற அரசின் திட்டத்துக்கு எதிரான தனிநபர் பிரேரணையை நான் ஆதரிப்பதோடு அவரின் சமூக உணர்வினையும் பாராட்டுகின்றேன். சமூக மாற்றம் மற்றும் சட்டத்துறையின் வளர்ச்சி என்பவற்றின் மூலம் நூற்றாண்டு கடந்து அனுபவிக்கும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திலே குறைகள் இருப்பின் அதனை கடந்த காலங்களிலே திருத்தங்கள் செய்து நடைமுறையில் உள்ளதனைப்போல் நடைமுறைப்படுத்த இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் ஒரு போதும் பின்னிற்கப் போவதில்லை. ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.

காதிகள் நியமனத்தின் போது தகுதி வாய்ந்த காதிகள் உள் வாங்கப்பட வேண்டும். மாத்திரமல்லாது அவர் ஒரு ஆலிமாக, சட்டத்தரணியாக, பட்டதாரியாக, இருக்க வேண்டும் என்பதோடு, காதிகளுக்கு எதிராக தற்போது முன்வைக்ப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணம் காதிகளின் நியமனம் அரசியல் சார்ந்ததாக இருப்பதனால் ஆகும்.  ஆகவே காதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடு முற்று முழுதாக இல்லாமல் செய்யப்பட வேண்டும். காதிகளின் நீதிமன்றங்கள் அவர்களுடைய வீடுகளிலே அமைந்திருப்பது முற்றாக தடை செய்யப்படுவதோடு அவற்றுக்கான பிரத்தியேக அரச கட்டிடங்கள் காதி நீதிமன்றங்கள் ஆக தொழிற்படும் நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும் .காதிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் முறையான முறையிலே விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக காதிகளுக்கான ஒழுக்காற்றுக் குழு அல்லது மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழுவிலே ஓய்வுபெற்ற முஸ்லிம் நீதிபதிகள்,  தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட வேண்டும்.

காதிகள் மற்றும் ஜூரிகளுக்கு முறையான முறையில் பயிற்சி வழங்கப்பட்டு இருத்தல் வேண்டும். ஜுரிகளாக பெண்களும் உள்வாங்கப்படுவதில் ஆட்சேபனைகள் இருக்கப்போவதில்லை.  ஆனால் காதிகளாக பெண்கள் உள்வாங்கப்படுவதனை முஸ்லிம் சமூகமும் பெரு மனம் கொண்டு வரவேற்கப் போவதில்லை. மாத்திரமல்லாது முஸ்லிம் தனியார் சட்டத்திலே இந்த நாட்டிலே அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தலைமை வகித்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பரிந்துரைகளும் மாற்றங்களும் உள்வாங்கப்பட வேண்டும். இவ்வாறான நடைமுறைகள் சாத்தியப்படும் இடத்தே முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் மீது இன்று குற்றம் சுமத்தும் சில முஸ்லிம் தரப்பார்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் வேண்டி நிற்கின்ற மாற்றங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்றார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours