கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு , இருவர் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் கித்துல்வத்த தெரிவித்தார். மிஸ்-சி நோய் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்


தற்போது கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 78 சிகிச்சை பெற்றுள்ளதோடு , 150 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பல அறைகளில் இந்த நோயாளர்கள் உள்ளனர்.

கொழும்பில் மாத்திரமின்றி நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளிலும் இந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 5 நாட்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இதுவே இந்நோயின் அபாய நிலைமை ஆகும். எனினும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாவிட்டால் நோயாளர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணல் என்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும். 

கொவிட் வைரசுக்கு எதிராக எமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி , எமது உடற்பாகங்களுக்கு எதிராகவே செயற்படும் நிலைமை ஏற்படுகின்றமையே நோய் நிலைமை தீவிரமடையக் காரணமாகும். அதற்கமைய இதய தொகுதிக்கு எதிராக செயற்படும் போது , இதயத்திற்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படக் கூடும். கடந்த 5 நாட்களில் இரு சிறார்கள் உயிரிழந்தமைக்கு இதுவே காரணமாகும். எனவே இந்நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் .
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours