இ.சுதா
சித்திரவேல் சசிதரன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்
திருகோணமலை மாவட்டம் மூதூரைச் சேர்ந்த அமரர் வீரபத்திரன் சித்திர வேல்(முன்னாள் அதிபர்) மற்றும் பூபாலபிள்ளை சறோஜா தேவி ஆகியோரின் மூத்த புதல்வரான திரு.சி.சசிதரன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் பெற்றுள்ளார்.
புகழ் பெற்ற ஆயுர் வேத வைத்தியர் க.பூபாலபிள்ளை(கோட்டுப் பரிசாரியார்) அவர்களின் மூத்த பேரனாகிய இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியினை தி /மூ /புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட துன்பியல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தமது சொந்த இடமாகிய களுவாஞ்சிகுடியில் குடியமர்ந்து களுதாவளை மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த.உயர்தர(வர்த்தகப்பிரிவு) கல்வியினை பூர்த்தி செய்த பின்னர் இளைஞர் சேவை மன்றத்தின் ம.தெ.எ.பற்று பிரதேச தலைவராகவும் களுவாஞ்சிகுடி ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் செயலாளராகவும் திகழ்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டத்தினை பூர்த்தி செய்தார்.
மயோன் கல்வி நிலையத்தில் கணனி டிப்ளோமா, இளைஞர் சேவை மன்றத்தில் சிங்கள டிப்ளோமா ஆகிய கற்கை நெறியினை பூர்த்தி செய்த இவர் 30 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பில் நுவரெலியாவில் சர்வோதய வங்கியில் மாவட்ட உதவி முகாமையாளராக தடம்பதித்த இவர் அக்காலப்பகுதியில் இலங்கை வர்த்தக சங்கத்தில் பட்டப்பின் திறன் விருத்தி கற்கையினை நிறைவு செய்திருந்தார்.
1998 காலப்பகுதியில் மட் /பட் /மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் பின்னர் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம்,கோட்டைக் கல்லாறு மகாவித்தியாலயம்,பெரிய கல்லாறு மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றிய நிலையில் 2009. ஆண்டு காலப்பகுதியில் நடை பெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து துறைநீலாவணை மகாவித்தியாலயத்திற்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார்.பின்னர் பதவி உயர்வு பெற்று களுதாவளை சாந்திபுரம் விபுலானந்தர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்பு களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் பல காலங்கள் அதிபராக கடமையாற்றிய பிற்பாடு தற்போது பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றி வருகின்றார்.
இலங்கை அதிபர் சேவை தரம் 1சேர்ந்த இவர் பட்டப்பின் டிப்ளோமா கற்கையினை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும்,முதுமாணி பட்டத்தினை கிழக்கு பல்கலைக் கழகத்திலும்,கிழக்காசிய முகாமைத்துவம்,PGSD இலங்கை வர்த்தக சம்பளன பீடத்திலும் பெற்றுக் கொண்டார்.
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை கொண்ட இவர் குறித்த இரு மொழிகளிலும் டிப்ளோமா கற்கையினை பூர்த்தி செய்ததுடன் அதிபர்களுக்கான வாண்மை விருத்தி மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தில் கருப்பொருள் பாட நெறியினையும் பூர்த்தி செய்துள்ளார்.
சிறந்த சமுக சேவையாளரான இவர் களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலத்தின் பிரதிச் செயலாளராகவும், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளராகவும்,தற்போது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார்.
Post A Comment:
0 comments so far,add yours