மாவட்ட செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வர்த்தக, வாணிப அமைச்சர், பாவனையாளர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் போன்றோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளரும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த 2018 ஆம் ஆண்டு, அமைச்சரவை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பவற்றின் அனுமதியுடன் பிரதேச செயலக மட்டத்தில் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்குடன் நாடு பூராவும் சுமார் 200க்கு மேற்பட்ட புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்கள், வர்த்தக அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் நியமன நிபந்தனைகளுக்கு முரணாக திடீரென மாவட்ட செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டு, அங்கிருந்து கடமை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது புலனாய்வு பணிகளை சுதந்திரமாக செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய கொவிட் பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலையில் வர்த்தகர்கள் தாம் நினைத்தவாறு பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்கும் கறுப்பு சந்தை, பதுக்கல் வியாபாரம் என்பவற்றில் ஈடுபடுவதற்கும் பிரதான காரணம் யாதெனில் பிரதேச செயலக மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் இல்லாமல் போனமையேயாகும்.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் நேரடி கண்காணிப்பு பிரதேச மட்டத்தில் இருந்தால்தான் வணிகக் கொள்ளைகளைத் தடுக்க முடியும். அதிகாரம் பரவலாக்கப்படுகின்ற இக்காலத்தில் பாவனையாளர் அதிகார சபையின் நிருவாகம் மாத்திரம் அதிகார குவிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பாவனையாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
இவர்களது நியமனம் எந்த நோக்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டதோ அந்நோக்கம் சிதறடிக்கப்பட்டு, இவர்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை மறுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் இவ்வுத்தியோகத்தர்கள் நேரடியாக தலையீடு செய்ய முடியாதவாறு, மாவட்ட செயலகங்களில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக காணப்படுகின்றன. இதன் மூலம் பகற்கொள்ளை வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, இவ்வுத்தியோகத்தர்கள் பலர் இதுவரை சேவையில் நிரந்தரமாக்கப்படாமல் இருந்து வருவதுடன் அடிக்கடி இடமாற்றத்திற்கும் உட்பட்டு வருவதன் காரணமாக அதிகமான பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது பதவிகளை விட்டுச் சென்றுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.
ஆகையினால், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அனைத்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதுடன் அவர்களது சேவையை பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த கடிதங்களில் வலியுறுத்தியுள்ளோம்- என்றார்
Post A Comment:
0 comments so far,add yours