(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கான மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கமைவாக தடாகங்களில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்ளுவோருக்கான நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சுயதொழில் ஆர்வம் காட்டும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் முன்மொழிவிற்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சினால் தலா ஒரு இலட்சம் வீதம் மாணியமாக வழங்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக 15 பயனாளிகளுக்கு தலா 50,000 பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தடாகங்களில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்ளுவோர் 10 பேரிற்கும், புகைக் கருவாடு உற்பத்தி செய்யும் 5 பேரிற்கும் முதற்கட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவான 50,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலையினை வழங்கி வைக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட  நன்நீர் உயிரின விரிவாக்கல் உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜே.அஹமட், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கல்வி பொறுப்பாளரும் பிரபல ஆசிரியருமான கே.கே.அரஸ் அவர்களும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours