(சுமன்)


கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஒவ்வொரு சபை அமர்வுகளுக்கும் முன்னைய அமர்வின் கூட்டறிக்கை இணைக்கப்பட்டே அமர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் மாநகரசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இம்முறை அவ்வாறான கூட்டறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மாநகரசபை பெரும்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் இன்றைய தினம் மாநகர முதல்வர் தலைமையில் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மேற்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதல்வரால் சபை நடவடிககைகள் ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பலரும் மேற்படி நிருவாக நடவடிக்கையைக் கண்டித்தும், கிழக்கு மாகாண ஆளுநர் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளின் காரணமாக மாநகரசபைக்கு குந்தகம் விளைவிக்கும் மாநகர ஆணையாளரை நியமித்து தொடர்ச்சியாக மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிகளின் மூலம் மக்களுக்கான சேவையினை வழங்க முடியாமல் இருப்பதாகவும், அனைத்திற்கும் மாநகர ஆணையாளர் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளை தொடர்வதாகவும் இதன்போது உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் சபையினால் மீளப்பெறப்பட்டுள்ளதுடன், அவரின் தொடர் நடவடிக்கை காரணமாக இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆணையாளரின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் தெரிவித்தே இன்றைய போராட்டத்தை மேற்கொள்வதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு குழப்பத்தினை விளைவிக்கும் ஆணையாளரை மாற்றி புதிய ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours