(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

தற்போதுள்ள காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் இடிமின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

புத்தளம் தொடக்கம் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையில் காணப்படும் என வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரமேஸ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரேலியா மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் மாத்தளை, பொலநறுவை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்றும் வீசும். இடிமின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தென்கிழக்கு வங்களா விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலத்தில் குறைந்த காற்றளுத்த தாழ்வு பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours