( க.விஜயரெத்தினம்)


இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்பது வெறுமனே இந்திய நலனுக்காக இலங்கையினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் செய்யப்பட்ட ஒன்றாகும்.அதனை மீண்டும் கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்லவேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

அகில் இலங்கை தமிழ் காங்கிரசின் முன்னாள் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை(5)மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

கடந்த 2005ஆம் ஆண்டு மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

அவரை நினைவுகூரும் வகையில் இன்று காலை மட்டக்களப்பு காரியாலயத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் இழப்பானது தமிழினத்திற்கு மிகப்பெரும் இழப்பாகவுள்ளது.அவரது இடத்தினை நிரப்புவதற்கு அவரது மகனைத்தவிர வேறுயாரும் இதுவரை உருவாகவில்லை.

கொடிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நடைபெற்ற பல இன்னல்களை வெளிக்கொணர ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் அந்த காலத்திலிருந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை சிங்களவர்களின் கோட்டையிலிருந்து மிகவும் துணிச்சலுடன் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் வெளியுலகுக்கு கொண்டுசென்றார்.

தமிழ் மக்களின் உண்மையான நீதிக்கான போராட்டம் என்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவே விடுதலைப்புலிகள் போராடுகின்றார்கள் என்று அன்று சர்வதேசத்திற்கு ஆயுதப்போராட்டத்தின் நியாயத்தினை எடுத்துக்கூறியதன் காரணமாக சந்திரிகா அம்மையார் அவர்களால் அந்தக் காலத்தில் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நீங்கள் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் இந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதை குமார் பொன்னம்பலம் அவர்கள் அன்றே சிங்கள மக்களுக்கும் தெரிவித்திருந்தார். போரை நிறுத்தாவிட்டால் நாடு எதிர்காலத்தில் மிகப்பெரும் கடன் சுமைக்குள் அகப்படும், நாட்டுமக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள் என்ற விடயத்தை அந்தக் காலத்திலே அவர் தெரியப்படுத்தியிருந்தார். இருந்தபோதும் அந்தக் காலத்தில் இருந்த அரச தலைவர்கள் அவருடைய கருத்தை நிராகரித்து ஒரு இனத்தை குறிவைத்து தொடர்ந்து போராடிமையினால் இன்று இந்த நாடு அதாளபாதாளத்திற்கு சென்றிருக்கின்றது.இந்த விடயத்தினை உலகம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.குறிப்பாக இலங்கை மீது கண்வைத்துள்ள நாடுகள் இவ்வாறான தலைவர்களின் கருத்துக்களை தெளிவாக பார்க்க வேண்டும். உங்களுடைய நாடுகளை கருத்திற்கொண்டு இலங்கைத்தீவிலே நீங்கள் நினைத்தவாறு அரசியலை நடத்தவேண்டுமென்றால் இங்கிருக்கின்ற மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம். 

தமிழ் மக்களுடைய இனவிடுதலைப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டமாகும்.சிங்கள மக்களைப் போன்று நாங்கள் இந்த நாட்டில் சம உரிமையுடன் வாழவேண்டும்.அதற்காகவே நாங்கள் போராடுகின்றோம் என்ற விடயத்தை தலைவர் குமார் பொன்னம்பலம் உட்பட பல புத்திஜீவிகள் தெரியப்படுத்தியபோது அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.


இந்தியா போன்ற நாடுகள் தங்களின் நலனைக்கொண்டு இங்கு பல கூட்டுக்களையும் தங்களுக்கு சார்பான அரசியல் தலைவர்களைக்கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களின் நலனை பாதிக்கின்ற வகையில் செயற்படுகின்றார்கள்.சீனா இங்கு காலூன்றியுள்ளது அதனை தடுக்கும் வகையில் இந்தியா தங்களது முகவர்களை பாவித்து ஒப்பந்தகளை செய்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற பகல் கனவினை நீங்கள் உடனே நிறுத்தவேண்டும்.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தினை இந்தியா கருத்தில்கொள்ளாவிட்டால் சீனா மட்டுமல்ல தெற்காசியாவில் உள்ள பல நாடுகள் இந்தியாவினை குறிவைக்கும் நிலையேற்படும்.

இந்த நாடு சினாவின் கடனில் அகப்பட்டுள்ளது.அதனைக்கொண்டு வடகிழக்கில் சீனா காலூன்ற நினைக்கின்றது.நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல.நாங்கள் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாகவே எங்களை நினைக்கின்றோம்.ஆனால் இந்தியா எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிப்பதற்கு எத்தனிக்கின்றது.அதனை விடுத்து தமிழ் மக்கள் விரும்புகின்ற வடகிழக்கு இணைக்கப்பட்ட ஒரு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தேசத்தினை அங்கீகரிக்ககூடிய ஒரு அரசியல் முன்னெடுப்பினை இந்தியா முன்னெடுக்கவேண்டும்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு எதிராக போராடிவருகின்றனர்.அதற்குள் தமிழ் மக்கள் முடக்கிய காரணத்தினால் இந்தியாவினை தாண்டி இன்று சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இந்தியா எந்த நடவடிக்கையினை எடுத்தாலும் அது தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக இருக்கவேண்டும். இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்பது வெறுமனே இந்திய நலனுக்காக இலங்கையினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் செய்யப்பட்ட ஒன்றாகும்.அது தமிழ் மக்களுக்காக கொண்டுவரப்படவில்லை.அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்னே அதனை தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். அதனை மீண்டும் கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்லவேண்டாம் எனத்தெரிவித்தார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours