சம்மாந்துறைவலயத்திற்குட்பட்ட இறக்காமம் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியும் ,குவாசி நீதவானுமாகிய கே.எல்.எம். ஹாசிம் (78) நேற்று புதன் கிழமை நள்ளிரவு மு.ப. 01.00 மணியளவில் காலமானார்.
05 பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது இறக்காமம் பிரதேசத்திற்கான குவாசி நீதவானாக கடமையாற்றி வந்தார்.
அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளத்திலும் சமாதானத்திற்கான சமயங்களின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தினதும் முக்கிய பிரதிநிதியாகவிருந்து சமுகநல்லிணக்கத்திற்கு வழிவகுத்தவர்.
இவரது மறைவானது இறக்காமம் பிரதேசத்தின் பேரிழப்பாகும். மர்ஹூம் கே.எல்.எம். ஹாசிம் இறக்காமத்தின் வரலாற்றில் பெரும் இடம்பிடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த கல்விப் பொக்கிஷமாக இறக்காமத்தின் கல்வி வளர்ச்சியில் அதிகம் பங்களிப்புச் செய்தவர்.
இவருடைய அர்பணிப்புமிக்க தியாகத்தின் காரணமாக இன்று பல்வேறு சிறந்த கல்வியலாளர்களை உருவாக்கியவர். இறக்காமத்தில் உள்ள அதிகமானவர்கள் இவரிடம் கற்றவர்களாக இருக்கின்றனர்.
சிறந்த ஆளுமைப் பண்பும் நிறைந்த சேவை மனப்பான்மையும் கொண்டவர் என்பதோடு இப் பிரதேசத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஆளுமைகளில் ஒருவருமாவார்.
எந்தநேரமும் ஊருக்கும் மக்களும் சேவை செய்யும் பேரார்வமும் உத்வேகமும் கொண்ட இளம் துடிப்புள்ள ஒருவராகவும் வெண்நிற ஆடையின் ஓர் அடையாளமாக நேர்த்தி மிக்க நிருவாக அதிகாரியாக என்றும் இருந்து வந்துள்ளார்.
கல்வித்துறை மட்டுமல்லாது ஏனைய சமூக விவகாரங்களிலும் தன்னை முழு மூச்சாக அர்பணித்து சேவையாற்றிய ஒருவர். நீண்ட காலம் இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல் பிரத நம்பிக்கையாளராகவும் இருந்து மக்களுக்கு பல்வேறு சேவைகளையாற்றியவர்.
இவர் முன்னாள் கல்முனை சாஹிரா கல்லூரியின் அதிபரும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆலோசகருமான கே.எல். அபூபக்கர் லெப்பை அவர்களின் சகோதரரும் ஆவார்.
சிறந்த குடும்ப பின்னணியைக் கொண்ட இறக்காமத்தின் உயிர்துடிப்புமிக்க ஓர் ஆளுமையின் இழப்பு அனைவருக்கும் கவலையான துக்ககரமான செய்தியாகும்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மாலை ஓட்டமாவடி மஜ்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours