(சுமன்)
கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1சி கிராம சேவகர் பிரிவு மயான வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தனியார் அமைப்பினருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்றைய தினம் இவ்விடயம் தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்ட மாநகரசபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்;ப்புத் தெரிவித்தும் அப்பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புகள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றய தினம் முன்னெடுத்திருந்தனர்.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ராஜன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச மதகுருமாரின் ஒத்துழைப்புடன் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதில் பிரதேச பொது மக்கள், கிராம, மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் முதியோர் அமைப்பினர், மீனவ சங்கத்தினர் எனப் பலதரப்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட காணி அமைந்துள்ள இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்;பாட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரையில் பேரணியாக இடம்பெற்று பின்னர் பிரதேச செயலகம் முன்னாள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தினுள் சென்று கல்முனை வடக்குப் பிரதேச செயலக பிரதேச செயலாளர் அவர்களைச் சந்தித்து மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
இது குறித்து பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட காணி கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவின் ஆளுகைக்குட்பட்டதெனவும் இருப்பினும் மேற்படி காணி தனியார் அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தான் அறியவில்லையெனவும் இது குறித்து மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வியத்திற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். அத்துடன் மக்களின், பொது அமைப்புகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் உரிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
மேற்படி அரச காணி தொடர்பில் அப்பிரதேசத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புகளின் பயன்பாட்டிற்காக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ஆதாய நோக்கம் கருதிய கட்டிட நிர்மான சங்கத்திற்கு தற்போது வழங்கியிருப்பதானது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம் என்ற கோரிக்கையினை முன்வைத்தே பொது அமைப்புகள் இப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி பின்னர் பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில், மேற்படி காணியில் உள்ள பெயர்ப்பலகை அகற்றப்படுமெனவும், அக்காணி வழங்கப்பட்ட விதம் மற்றும் இதர செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்குக் குழு ஒன்றை நியமித்திருப்பதாகவும் தெரியப்படுத்தினார்.
ஆனாலும் இபபிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை தற்போது இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை விகாராதிபதி உட்பட மதத்தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பிரதேச செயலக முன்றலில் முற்றுகையிட்டிருந்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து அக்காணிக்காக வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட்ட கடிதம் கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours