(சுமன்)



இன்று இந்த ஆட்சியாளர்களின் இத்தகைய சட்டத் திருத்தங்களின் போலி வெடம் தொடர்பாக நீங்களும் குரல் கொடுங்கள் இல்லையேல் நாளை இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மகாசங்கத்தினர் மீதோ மற்ற மதகுருமார்கள் மீதோ பாயாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடு தொடர்பாக நல்லதொரு முடிவை காலம் கடந்தும் எடுக்கத் தயங்காதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்தம் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்துத் தெரிவக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் குள்ளநரித்தனம் மிக்கவர் என்ற புகழுக்குரிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் நரித்தனச் சிந்தனையின் வெளிப்பாட்டினாலேயே இன்று நாடும் எம் தமிழினமும் அனுபவித்து வரும் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டு வரப்பட்ட 1979ம் ஆண்டின் 48ம் இலக்கப் பயங்கரவாதத்தடைச் சட்டம்.

அன்று நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் உணர்வு பூர்வமான உரிமைப் போராட்டத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் சர்வதேச நியமங்களுக்குப் புறம்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரனாக குறுகிய காலங்கள் எனப் பாராளுமன்றத்தை ஏமாற்றி தனது குள்ளநரி இராஜதந்திரத்தைச் சாமர்த்தியமாகச் செயலில் காட்டி இந்த நாட்டின் தமிழ் இளைஞர்களை, தமிழ்த் தேசியவாதிகளை இலக்கு வைத்துக் கொண்டு வரப்பட்டதே இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம்.

ஆயுதப் படையினருக்கும், முப்படையினருக்கும், பொலிசாருக்கும் நாட்டின் குற்றிவியல் மற்றும் தண்டணைச் சட்டக் கோவைகளுக்கு அப்பால் தனித்துவமான அதிகாரங்களை வழங்கி தமிழன் எவன்மீதாவது சந்தேகம் இருந்தால் கைது செய்யலாம் அல்லது அவன் உயிரை மாய்த்து விடலாம், மரண விசாரணையோ எதுவித விசாரணையோ இல்லை. தனது உரிமையைக் கோரும் எந்தத் தமிழனையும் அழித்துவிடு, கைது செய், சித்திரவதை செய், முடிந்தவரை தமிழனைக் கொடுமைப்படுத்து, தமிழர்களின் அந்தரங்க உறுப்புகளை அசிங்கப்படுத்து, தமிழர்களின் ஆண்மையை, பெண்;மையை அழித்துவிடு என்ற இன்னபிற மனிதாபிமானம் கண்டிராத, மனித குலம் கண்டிராத சித்திரவதைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்ததே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம்.

சட்டம் கூறுகின்றது 18 மாதங்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவோடு தடுத்து வைக்கலாம் என்று. ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? முப்பது வருடங்களுக்கு மேலாக எதுவித குற்றச்சாட்டுகளும் சுமத்தாமல், குற்றச்சாட்டுப் பத்திரமும் நீதிமன்றத்தில் சமர்ப்;பிக்காமல் இளமையில் கைது செய்யப்பட்டு இன்று முதுமை வரைக்கு தம் வாழ்நாளைத் தொலைத்து விட்டு தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதே இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம்.

இதற்கும் மேலாக முகநூலில் பதிவிடும் இளைஞர்களைக் கூடக் கைது செய்கின்றது. கடந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டார்கள். தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களோடு கைது செய்யப்பட்ட செங்கலடி வர்த்தகர் தியேட்டர் மோகன் என்பவர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

இன்று சர்வதேச நெருக்குவாரத்தால் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சடத் திருத்தம் பற்றி சட்டம் படித்த சட்டப் பேராசிரியர் அமைச்ர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு நாகன் வாயால் கூடச் சிரிக்க முடியாதுள்ளேன். நீதி அமைச்சர் திறமையான மனிதன். இந்தச் சட்டத்திருத்தத்தைப் பொருத்தளவில் அவர் சூழ்நிலைக் கைதி. இந்தப் பதினெட்டு மாதத் தடுப்பை அவர்கள் ஒரு வருடம் என்று குறைக்கின்றார்கலாம் என்று இவர்கள் படம் காட்டுவது எதைக் காட்டுகின்றது?

ஒன்று மட்டும் உண்மை அன்று இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது இந்த நாட்டிலுள்ள தமிழர்களை, தமிழ் இளைஞர்களை இலக்காகக் கொண்டே. இன்று இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் மூவின மக்கள் மீதும் பாய்கின்றது. இந்த நாட்டில் பிறந்த இந்த நாட்டை நேசித்து தமிழ்த் தேசியத்திற்காக ஆயுதம் ஏந்தி ஒருங்கிணைந்த நாட்டில் சமத்துவமாக வாழ வேண்டும் என்று நம்பிக்கை கொண்ட நான் இந்த நாட்டின் அரசியலை இயக்கும் மகாசங்கத்தினர், பௌத்த பீடங்களின் பிரதானிகள், பௌத்த, இந்;து கத்தோலிக்க, இஸ்லாமிய மதகுருமார் உட்பட இந்த நாட்டின் மூவின மக்களையும் அன்புடனும் ஆதரவுடனும் அறைகூவல் விடுத்து அழைக்கின்றேன்.

இன்று இந்த ஆட்சியாளர்களின் இத்தகைய சட்டத் திருத்தங்களின் போலி வெடம் தொடர்பாக நீங்களும் குரல் கொடுங்கள் இல்லையேல் நாளை இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மகாசங்கத்தினர் மீதோ மற்ற மதகுருமார்கள் மீதோ பாயாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடு தொடர்பாக நல்லதொரு முடிவை காலம் கடந்தும் எடுக்கத் தயங்காதீர்கள்.

நாங்கள் கேட்பது இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தம் அல்ல. இந்தக் கொடிய சட்டம் முற்றுமுழுதாக இலங்கை அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். தூக்கி எறியப்பட வேண்டும். இந்தத் திருத்தம் சர்வதேச அழுத்தம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இல்லாதொழிக்கும் என்ற பயத்தினால் கொண்டு வரப்படுகின்றதே தவிர தமிழர்களுக்கோ இந்த நாட்டு மக்களுக்கோ நிம்மதியான வாழ்வைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தை நானும் எங்களது கட்சியும் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours