பாறுக் ஷிஹான்


சட்டவிரோதமாக கல்முனை புதிய பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில்  கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை(8) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குக்கு அருகாமையில் புதிதாக புணர்நிர்மானம் செய்யப்பட்டு மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை தனக்கு சொந்தமானது என கூறி தனிநபர் ஒருவர் கட்டுமானம் ஒன்றினை மேற்கொள்ள தயாராகியுள்ளார்.

இதனை அறிந்த கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  சம்பவ இடத்திற்கு சென்றதுடன் சட்டவிரோதமாக பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை தனக்கு உரித்தானது என தெரிவித்த நபருடன் கலந்துரையாடிய பின்னர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினையும்  மேற்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதல்வர்  கல்முனை புதிய பேரூந்து நிலையமானது அரசாங்கத்தின் காணியாகும்.இக்காணியில் தனிநபர் உறுதி ஒன்றினை கொண்டு வந்து தனக்கு இவ்விடத்தில் உரித்து உள்ளதாக குறிப்பிட்டு கட்டுமானம் ஒன்றினை நிர்மாணிக்க அடித்தளம் ஒன்றினை நிர்மாணிக்க  முற்பட்டுள்ளார்.இதனை தற்போது குறித்த தனி நபரின் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளோம்.சட்டம் அதன் கடமையினை செய்யும் என நம்புகின்றேன் என்றார்.அண்மைக்காலமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அரச காணிகளில் தனிநபர்கள் சிலர் சட்டவிரோதமாக கட்டடங்கள் அமைக்க முயற்சிப்பதுடன் மாநகர சபை அதனை தடுப்பதும் வழமையான சம்பவமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனி நபரினால் அவ்விடத்திற்கு கொண்டுவரப்பட்ட கற்கள் மண் உள்ளிட்ட பொருட்கள் மாநகரசபையினால்  எடுத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours