அன்று 2001, தொடக்கம் 2010, வரை ஒன்றாக இயங்கிய தமிழ்தேசிய அரசியல் பற்றிலா, பயத்திலா என்பதும் 2010, தொடக்கம் இன்று 2022, வரை ஒன்று பத்தாக மாறியது பதவிக்கா,உதவிக்காஎன்பதை சிந்திக்கவேண்டி உள்ளது.
இன்று கார்த்திகை 27, மாவீரர்நாள் இலங்கை நேரம் 6.05, மணிக்கு வடக்கு கிழக்கில் உள்ள 33, துயிலும் இல்லங்களில் தற்போதும் படை முகாம் உள்ள 10,துயிலும் இல்லங்கள் தவிர்ந்த 23, துயிலும் இல்லங்களில் பொதுமக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றனர்.
இன்னும் இராணுவ முகாம் உள்ள துயிலும் இல்லங்கள்
மட்டக்களப்பு மாவட்டம்:
தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்.
யாழ்ப்பாணம் மாவட்டம்:
கொடிகாமம் துயிலும் இல்லம்,
எள்ளாங்குளம் துயிலும் இல்லம்,
கோப்பாய் துயிலும் இல்லம்
வவுனியா மாவட்டம்:
ஈச்சங்குளம் துயிலும் இல்லம்
முல்லைத்தீவு மாவட்டம்:
சேராவில் துயிலும் இல்லம்,
முள்ளியவலை துயிலும் இல்லம்
அடம்பன் துயிலும் இல்லம்,
துணுக்காய் துயிலும் இல்லம்,
ஆலங்குளாய் துயிலும் இல்லம்
ஆகிய பத்து துயிலும் இல்லங்கள்
முள்ளி வாய்க்காலில் போர் 2009, மே,18,ல் மௌனிக்கப்பட்டு இன்று 2022, நவம்பர்,27 சரியாக 13,வருடமும், 6,மாதமும்,9, நாட்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 2001, அக்டோபர், 20,ல் உருவாக்கப்பட்டு இன்றைய மாவீரர் நாளில் 2022, நவம்பர்,27 சரியாக 21, வருடங்களும்,1, மாதமும் 7, நாட்களும் ஆகின்றது.
ஏன் இந்த கணக்குகளை சரியாக சொல்லவேண்டியுள்ளது என்பதை சிந்திக்கவேண்டும், தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது. அதில் அப்போது எனது பங்களிப்பும் இருந்தது.
கட்சி ஆரம்பிக்கும்போது 2001,அக்டோபர்.20,ல் நான்கு கட்சிகளாக இருந்து நான்கு கட்சிகளில் பிரதான கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுலை கூட்டணியுடன் இருந்தமையால் தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னம் 2001,தேர்தலில் பாவிக்கப்பட்டது ஆனால் 2004,ல் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து ஆனந்தசங்கரி தனி ஒருவராக விலகிச்சென்றதும் தமிழர் விடுதலை கூட்டணி சட்டச்சிக்கல் காரணமாக ஆனந்தசங்கரி தவிர்ந்த ஏனையவர்கள் சம்மந்தன்ஐயா, மாவை சேனாதிராசா, ஜோசப்பரராசசிங்கம், பொன். செல்வராசா, கி.துரைரெட்ணசிங்கம்,சீ.வி.கே.சிவஞானம்,மற்றும் பலர் ஆனந்தசங்கரிக்கு பின்னால் இலங்கை தமிழரசு கட்சியை விட்டு போகவில்லை என்பதை அனைவரும் புரியவேண்டும்.அவர்கள் தாய் கட்சியான இலங்கை தமிழரசுகட்சி உறுப்பினர்கள் என்பதால் இலங்கை தமிழரசு கட்சியுடனே செய்பட்டனர் சிலர் கூறுவது போன்று 2001,ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கும் போது இலங்கை தமிழரசுகட்சி உள்வாங்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறான கருத்து அப்பட்டமான பொய். அப்படி இலங்கை தமிழரசு கட்சி தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்த காரணத்தினால்தான் ஆனந்தசங்கரி என்ற தனிமனிதன் தமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமையால் 2004, ல் பொதுத்தேர்தலில் இலங்கைதமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிடுமாறு விடுதலைப்புலிகளின் தலைமையே பணித்தது என்ற உண்மையை விளங்கிக்கொண்டு கருத்துகளை தெரிவிப்பது நல்லது தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)அல்லது ஈழமக்கள் புரட்சிகர இயக்கம்(EPRLF)அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் (ACTC)ஆகிய மூன்று கட்சிகளின் சின்னத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட விடுதலைப்புலிகளின் தலைமை அப்போதும் அனுமதிக்கவில்லை என்பதை புரிதல் நல்லது. இதுவும் விடுதலைப்புலிகளின் தீர்கதரிசன முடிவு என்பதை இப்போதுள்ள அனைவரும் அறிந்தால் சிறப்பு. கடந்த 2004,ல் என்ன நடந்தது என்பதை அறியாத சிலர் கூறுவது போன்று ரெலோ கட்சிதான் 2001 தொடக்கம் இன்றுவரையும் தொடர்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்படுகிறது என்பது முற்றிலும் தவறான புரிதல்.
இலங்கை தமிழரசு கட்சியும் 2001, தொடக்கம் இன்று வரையும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தொடர்ச்சியாக செயல்படும் கட்சி என்பதை மீண்டும் ஆதாரத்துடன் நிருபிக்கமுடியும்.
2001, தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு 2004, ல் ஆனந்தசங்கரி என்ற தனிமனிதனால் அந்த கட்சியில் போட்டியிடாமல் போனபோது இனி எந்த கட்சி சின்னத்தில் தேர்தலை சந்திப்பது என்ற கலந்துரையாடல் கிளிநொச்சியில் 2004, பெப்ரவரி,6, ல் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2004, பெப்ரவரி,10, ம் திகதி விடுதலைப்புலிகளால் கிளிநொச்சியில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஏற்கனவே 2001,ல் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் நான்கு அழைக்கப்பட்டனர் தமிழர் விடுதலை கூட்டணியில் சார்பாக இலங்கைதமிழரசுகட்சி பிரமுகர்கள், அகில இலங்கை தமிழ்காங்கிரஷ் பிரமுகர்கள், தமிழீழ விடுதலை இயக்க பிரமுகர்கள்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் பல தளபதிகளும் தமிழ்தேசிய்கூட்டமைப்பின் நான்கு கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஆராய்ந்தனர் அதில் இலங்கை தமிழரசு கட்சி பிரமுகர்கள் தவிர்ந்த ஏனைய மூன்று அரசியல் கட்சி தலைவர்களும் தமது கட்சிகளின் சின்னங்களையும் தமது கட்சிகளின் பெயர்களையும் தேர்தலில் பாவிப்பதற்கு விருப்பம் என மூன்று கட்சி தலைவர்களும் பூரண சப்மதங்களை தெரிவித்தனர்.
மூன்று கட்சி தலைவர்களின் விருப்பத்தையும்
ஆழமாக கேட்டுவிட்டு விடுதலைப்புலிகளின் தலைவர் நிதானமாக கூறினார் இலங்கை தமிழரசு கட்சி எந்த நிலையில் உள்ளது அந்த கட்சி வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதில் ஏதும் பிரச்சனை உள்ளதா அண்ணா் என மாவை சேனாதிராசாவிடம் கேட்டார். மாவை அண்ணர் நீங்கள் சரி என்றால் அதில் போட்டியிடலாம் தம்பி எந்த பிரச்ணனைகளைம் இல்லை என மாவைசேனாதிராசா கூறினார் சரி இனி இலங்கை தமிழரசுகட்சியில் 2004, பொதுத்தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு ஆயத்தமாகுங்கள் இதுதான் முடிவு என இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது அன்று 2004,பெப்ரவரி, 10,ல் கிளிநொச்சியில் எடுத்த முடிவின் பிரகாரமே இலங்கை தமிழரசுகட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இன்றுவரை உள்ளது என்ற உண்மை பலருக்கு தெரியவாய்புகள் இல்லை.
2004ல் இலங்கை தமிழரசு கட்சி வீட்டுச்சின்னத்தின்மூலமாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து 22,பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். இரா. சம்மந்தரை தலைவராக கொண்ட இலங்கை தமிழரசு கட்சி(ITAK)கஜேந்திரகுமாரை தலைவராக கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், (ACTC) செல்வம் அடைக்கலநாதனை தலைவராக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) சுரேஷ்பிரமச்சந்திலனை தலைவராக கொண்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF)ஆகிய நான்கு கட்சிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் யார் யார் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் யார் யாரை வேட்பாளராக நிறுத்தக்க்ககூடாது என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளே வழங்கியும் இருந்தனர் என்பது வெளிப்படையிலான உண்மை அது இலங்கை அரசுக்கும், ஊர் உலகத்திற்கும் தெரிந்த விடயம்.அந்த தேர்தல் 2004, ஏப்ரல், 02,லில் வரலாற்றில் முதல்தடவையாக 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமானம் எடுப்பதற்கு முன் 2004,ஏப்ரல்,20,ம் திகதி கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன், புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான், மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் உள்ளிட்ட பல தளபதிகள் 22,பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில்தான் நான்(பா.அரியநேத்திரன்) கருணாவின் பிளவின்போது அந்தத் தரப்பிலிருந்து வெளியேற முடியாத நிலையிலிருந்த போராளிகள் பின்னர் நடைபெற்ற வாகரை மோதலில் கொல்லப்பட்டனர் இவர்களையும் மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும் என தலைவர் பிரபாகரனிடம் கேட்டேன்.
தலைவர் பதில் சொல்வதற்கு முன்னமே யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குறிக்கிட்டு விடுதலைபுலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை யார் யாரை மாவீரர் பட்டியலில் இணைப்பது ,இணைக்கக்கூடாது என்று நீங்கள் சொல்லக்கூடாது அவர்களின் நடவடிக்கையில் நீங்கள் தலையிடக்கூடாது என என்னிடம் கூறினார்.
ஆனால் தலைவர் பிரபாகரன் உடனே செ.கஜேந்திரன் கூறியதை நிராகரித்து இவர்(அரியநேத்திரன்) அந்த மக்களின் பிரதிநிதி. தன்னுடைய மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறார் . இம்மோதலில் உயிரிழந்தவர்கள் ஏற்கெனவே எம்முடன் இருந்து விசுவாசமாகச் செயற்பட்டவர்கள்தானே அரியம் அண்ணர்
கூறியதை நான் ஏற்கிறேன் அவர்களை மாவீரர் பட்டியலில் சேர்க்கலாம் என்று கூறினார் இந்த செய்தி சகல ஊடகங்களிலும் 2004, ஏப்ரல்,21,ல் வெளியிடப்பட்டது.
இதன்பின்னர் கலந்துரையாடலில் நான் இன்னும் ஒரு விடயத்தை கேட்டேன் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளையும் ஒரு கட்டமைப்பாக ஒரு கட்சியாக பதிந்தால் நல்லது என கூறினேன்.
அதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சம்மதிக்கவில்லை அதற்கு அவர் கூறிய பதில் “இல்லை நான்கு கட்சிகளாக செயல்படுவதே சிறப்பு பல கட்சிகளின் கூட்டாக தேர்தலில் போட்டியிட்டு ஒற்றுமையாக செயல்படும்போதுதான் அது பலமான அரசியல் செயல்பாடாக வெளிக்காட்டப்படும் அந்தந்த கட்சிகள் அப்படியே தொடந்தும் இருக்கட்டும் தேர்தல் கூட்டாக மட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இயங்கும்” என கூறினார் இதனை 22,பேரும் அப்போது ஏற்றிருந்தனர்.
2009, மே,18, போர் மௌனிக்கும் வரை அந்த முடிவின்படி 2010, பொதுத்தேர்தல் வரை நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டது
போர் மைனித்தபின்னர் 2010, தேர்தலுக்காக வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட முரண்பாடுகளால் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய மூவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி சின்னமான துவிச்சக்கர வண்டி( சைக்கிள ) சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு இன்றுவரையும் இயங்குகின்றனர்.
ஆனால் 2009, மே,18, க்கு பின்னர் 2009, நவம்பர் மாதம் சித்தாத்தன் தலைமையிலான புளட் கட்சியை தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்வாங்கவேண்டும் என்ற நோக்கில் சித்தாத்தனின் கொழும்பு இல்லத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக அப்போது இருந்த மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரமச்சந்திரன், செ.கஜேந்திரன், பா.அரியநேத்திரன், இன்னும் சிலர் சென்றிருந்தோம்.
அப்போது புளட் தலைவர் சித்தாத்தனிடம் மாவை சேனாதிராசா தம்பி நீங்களும் உங்கள் கட்சியும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்து நாம் ஒற்றுமையாக பலமாக பயணிக்கவேண்டும் என கேட்டார்.
அதற்கு சித்தாத்தன் சம்மதிக்கவில்லை அவர் கூறிய காரணம்” தமிழ்தேசிய கூட்டமைப்பு” என்ற பெயரை மாற்றி வேறு ஒரு பெயரில் இயங்கினால் மட்டும் உங்களுடன் இணைவதை பற்றி சிந்திக்கலாம் என்ரார். அப்போது மாவை சேனாதிராசா ஏன் தம்பி பெயரில் என்ன உள்ளது என கேட்டார் அதற்கு இவர் கூறியபதில் “புலிகள் உருவாக்கி புலிகளால் வைத்தபெயர்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதில் நாங்கள் சேரமுடியாது”
என்றார் அதை பின்னர் பார்ப்போம் எதற்கும் யோசியுங்கள் என மாவை சேனாதிராசா கூறிவிட்டு நாம் வெளியேறினோம்.
நான் அவரின் வாசலில் வைத்து மாவை சேனாதிராசா மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினேன் “எக்காரணம் கொண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற நான் விடமாட்டேன் என்றேன் எனக்கு ஆதரவாக செ.கஜேந்திரனும் கூறினார்”
ஆனால் 2011,ல் புளட் எந்த நிபந்தனைகளும் இன்றி தமிழ்தேசிய்கூட்டமைப்பில் இணைந்து கொண்டது.
2010, ல் இலங்கை தமிழரசுகட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளே தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் தேசிய பட்டியல் உறுப்பினராகவே முதன் முதலாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசு கட்சி மூலமாக பாராளுமன்ற உறுப்பினரானார்.
ஆனால் 2011, வடமாகாணத்தில் சில மாவட்டங்களில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் சித்தாத்தனை தலைவராக கொண்ட தமிழ் மக்கள் விடுதலை கழகம்(PLOTE) தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டது, இது தவறான அணுகுமுறை ஏற்கனவே தமிழ்தேசி கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும்போது 2001, ல் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய மாட்டோம் என கூறி விலகி இருந்தமை, 2009, நவம்பரில் புளட்டை உள்வாங்க சென்றபோது புலிகளால் ஆரம்பித்த கட்சியில் சேரமாட்டோம் என கூறிய விடயம்,என்பவற்றை காரணம் காட்டி மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொ. செல்வராசா, சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் புளட்டை சேர்க்கவேண்டாம் என எழுத்துமூலமாக இலங்கை தமிழரசு கட்சி தலைவர் இரா.சம்மந்தன், பொதுச்செயலாளர் மாவைசேனாதிராசா ஆகியோருக்கு கடித்த்தை கொடுத்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் தெரிவித்தனர் ஆனால் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து கவனத்தில் எடுக்காமல் புளட் பிரதேச சபை தேர்தல்களில் வடமாகாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டு இன்றுவரை பயணிக்கிறது.
2013, வடமாகாணத்தேர்தலில் 2004,ல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலை கூட்டணியுடன் தனித்து விலகி இருந்த ஆனந்தசங்கரியார் வட மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் மீண்டும் இணைந்தார்.
அதனால் அவர் கிளிநொச்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கையோடு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமை விட்டு விலகிச்சென்ரார்.ஆனந்தசங்கரி ஐயா 2004, ல் தமிழ்தேசிய கூட்டமைப்பை விட்டு விகியவர் 2013, ல் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் தமிழ்தேசியகூட்டமைப்புடன் இணைந்த விடயமும் பலருக்கு தெரியாது.
2015, பொதுத்தேர்தலில் இலங்கை தமிழலரசு கட்சி, ஈபீஆர்எல்எவ், ரெலோ, புளட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டுட்டது. அதில் யாழ்மாவட்டத்தில் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவாகவில்லை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தமக்கு தரவேண்டும் என சுரேஷ் கோரியபோதும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஈபிஆர்எல்எவ் கட்சிக்கு அதிருப்தி முரண்பாடுகள் தொன்றி இருந்தன.
இதன் எதிரொளி 2020, பொதுத்தேர்தலின்போது சுரேஷ் பிரமச்சந்திரனை பொதுச்செயலாளராக கொண்ட ஈபிஆர்எல்எவ் விலகியது. இதனால் இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, புளட் ஆகிய மூன்று கட்சிகளுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டது.
2013, வடமாகணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராவை நிறுத்துவதற்கான வாய்புகள் இருந்தவேளை கொழும்பில் உள்ள முன்னாள் நீதியரசர் விக்கினேஷ்வரனை தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டபோது நான்(பா.அரியநேத்திரன்) பகிரங்கமாக எதிர்த்தேன் அவர் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு பொருத்தமில்லை மாவை சேனாதிராசாவே மிக பொருத்தமானவர் என்பதை பகிரங்கமாக கூறி ஊடகங்களிலும் எனது கருத்தை வெளியிட்டும் இருந்தேன் வழமை போல் எனது கருத்து கட்சியில் எடுபடவில்லை விக்கினேஷ்வரன் அவர்களே முதலைமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார்.
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமானம் எடுக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் வேளையில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட விக்கினேஷ்வரன் ஐயா தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தெரியாமல் கொழும்பில் சென்று ஜனாதிபதி மகிந்தராஷபக்ஷ முன்னிலையில் பதவி பிரமானம் செய்து தமிழ்தேசிய அரசியலுக்கு கரிபூசினார்.
2020, பொதுத்தேர்தலில் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் அதில் இருந்து விலகி தனிக்கட்சி அமைத்தனர் அதுபோல் 2013, ல் இலங்கை தமிழரசு கட்சிமூலம் வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற அனந்தி சஷிகரன் 2018, ல் விலகி தனிக்கட்சி அமைத்தார், இதேபோல் வடமாகாண சபையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டுயிட்டு வெற்றியீட்டிய ஐங்கரநேசன் தற்போது தனியான அமைப்பை நிறுவி செயல்படுகிறார்.வடமாகாண சபையில் வேட்பாளராக மன்னாரில் நிறுத்தப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழரசுகட்சி வாலிபர் அணி தலைவர் சிவகரன் இலங்கை தமிழரசுகட்சி மத்திய குழு உறுப்பினராக செயல்பட்டவரும் தற்போது விலக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து செயல்படுகிறார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் 2009, மே,18, க்கு முன்னர் விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் இயங்கு நிலையில் உள்ளபோது ஒற்றுமையாக ஒரே கூட்டாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்பட்டவர்கள் முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பத்து கட்சிகளாக பிரிந்து நின்று மீண்டும் ஒற்றுமை பற்றி கதைக்கின்றனர்.
இன்றைய மாவீரர் நாளில் தமிழ்மக்கள் சிந்திக்கவேண்டிய விடயம் விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருந்தது ஆனால் இன்று பத்தாக மாறியதற்கு காரணம் அன்று பற்றா ..? அல்லது பயமா ..? விடை காணாத வினா இது.
-பா.அரியநேத்திரன்.

Post A Comment:
0 comments so far,add yours