எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தை உண்மையிலே மதிப்பதாக இருந்தால் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் தமிழ் தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் .
இவ்வாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாந்தன் தெரிவித்தார்.
ஜனநாயக போராளிகள் கட்சியினர் போராளிகளின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வை நேற்று (24) வியாழக்கிழமை வெல்லாவெளியில் நடத்தினர் .
மட்டு.அம்பாறை தலைமையகத்தில்
கட்சியின் உப தலைவர் என். நகுலேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றவர்கள் சேர்ந்து கதறியழுத வண்ணம் ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆக வணக்கத்தை மேற்கொண்டார்கள்.
அங்கு பிரதமர் அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்மைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார் .சிறப்பு அதிதியாக போரதீவுப் பற்று பிரதேச சபை உறுப்பினர் தம்பி பிள்ளை தியாகராஜா கலந்து கொண்டார்.
அங்கு சாந்தன் மேலும் உரையாற்றுகையில்...
நாம் எமது மண்ணில் யாருடைய அச்சுறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக எங்களை நாம் ஆளக்கூடிய ஒரு அதிகாரத்தை கோரி போராட்டத்தை நடத்தி வந்தோம். இந்த மக்கள் விடுதலைக்காக இந்த மண்ணின் விடுதலைக்காக எமது மாவீரர்கள் பல வடிவங்களில் தியாகங்களை செய்தார்கள் .
எனவே அந்த மாவீரர்களின் தியாகங்கள் வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் சுயாட்சியுடன் கூடிய ஒரு தீர்வை நாங்கள் எட்ட வேண்டும்.
நாங்கள் ஆயுத போராட்டம் அரசியல் போராட்டம் என்று இரண்டு கோணங்களிலே அன்று போராட்டங்களை நகர்த்தி இருந்தோம். 2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனித்தது. இருந்தபோதிலும் அரசியல் போராட்டம் என்பது தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது .
இந்த மாவீரர் தின நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன்.
தமிழ் மக்களின் அபிலாசைகளோடு மாவீரர்களின் அபிலாசைகளோடு விளையாட வேண்டாம்.
தமிழ் தேசிய பரப்பில் இருக்கக் கூடிய தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். நான் பெரிதா ?நீ பெரிதா ?என்று தூக்கிப் பிடித்துக் கொண்டு அலைய வேண்டாம். நீங்கள் கெட்டிக்காரர்களாக பலவான்களாக இருக்கலாம் .ஆனால் எமது நோக்கங்கள் எல்லாம் ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது .
நான் சொல்வது தமிழ் பிரதிநிதிகள் என்னும் பொழுது சிங்கள கட்சிகளில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதிகளை குறிப்பிடவில்லை .
தமிழ் தேசிய பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளை குறிப்பிடுகின்றேன். தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதிகள் தங்களது சுயலாபம் சுய கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு நீங்கள் ஒரு குடையின் கீழ் மாவீரரின் தியாகத்துக்காக ஒன்றிணைங்கள். என்று கேட்டுக் கொள்கின்றேன் .
இன்று ஜனாதிபதி ரணில் தமிழ் மக்களை பேசஅழைத்து இருக்கின்றார்.
இந்த இடத்திலே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றாக இணைந்து அந்த பேச்சு வார்த்தையை மேற்கொண்டு நாம் எதிர்பார்த்த அந்த தீர்வை அடைய வேண்டும் .
அடுத்து மக்களுக்கான ஒரு வேண்டுகோள்.
மக்களே தேர்தல் வரப் போகிறது. பலரும் வருவார்கள். அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம் போகாதீர்கள் .வாக்கு கேட்டு வரும் எல்லோருக்கும் வாக்களிக்க வேண்டாம். தமிழ் தேசிய உணர்வோடு தமிழ் தேசியத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள். உங்களது பிள்ளைகளின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி உங்கள் பிள்ளைகள் எதற்காக இந்த மண்ணிலே ஆகுதியானார்களோ அதை நினைத்து வாக்களியுங்கள் .
தமிழ் தேசிய கட்சியில் வருகின்ற வேட்பாளர்களை ஆதரித்து எமது அவிலாசைகளை வென்றெடுக்க வேண்டும். என்றார்.
இறுதியில் மாவீரர்களின் பெற்றோர் உலருணவு மதிய உணவு மற்றும் தென்னம்பிள்ளை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

Post A Comment:
0 comments so far,add yours