அபு அலா
லண்டன் Benefit Mankind நிறுவனத்தினால் 5 கோடி ரூபா நிதியின் கீழ் கிண்ணியா பூவரசடித்தீவில் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ நிலையம் நேற்று மாலை (01) திறந்து வைக்கப்பட்டது.
அல்-மினா மகா வித்தியாலய அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தனர்.
நெடுந்தீவு, சமாவச்சந்தித்தீவு, ஈச்சந்தீவு, பூவரசடித்தீவு, ஆளங்கேணி போன்ற கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இக்கிராமம் உருவாக்கப்பட்ட காலம்தொட்டு மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாக இருந்தால் சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டும். அவ்வாறு செல்கின்ற வீதிகள் யாவும் குண்றும் குழியுமாக காணப்படுகின்றதும் பெரும் கவலைக்குரிய விடயமாகவும், வாகன போக்குவரத்து அற்ற நிலைமையிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக, இங்கு வசிக்கின்ற மக்கள் அவசர சிகிச்சையை பெற்றுக்கொள்ள பாரிய சவால்களையும் எதிர்கொண்டே வந்துள்ளனர். இந்நிலைமையை கருத்திற்கொண்ட அல் ஹிக்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அப்பாஸ் இபாதுல்லாஹ், இக்கிராம மக்களின் நிலைமைகளைப் பற்றி லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ்வின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்த தனியார் மருத்துவ நிலையம் நிர்மானிக்கப்பட்டு நேற்றயதினம் பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு, லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ் மற்றும் றிஸ்வான் ஹர்தா, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் மாகாண சமூகநல மருத்துவ ஆலோகர் வைத்தியர் எஸ்.அருள்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கணி, மூதூர் தள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆர்.ரோஹான் குமார், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் உள்ளிட்ட பல அதிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours