(சுமன்)


கடந்த 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்நிறுத்தியும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து மேற்கொண்டுவரும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றைய தினம் வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய இப்பேரணிக்கு ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு வழங்கும் முகமாக பேரணி வலம்வரும் இடங்களில் பல அமைப்புகள், அரசியற் கட்சிகள் பேரணியில் இணைந்தனர்.

அந்த வகையில் இன்றைய தினம் வெருகல் முருகன் கோவிலில் வைத்தும் பல அரசியற் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் இப்பேரணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியில் இணைந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ கருணாகரம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் இப்பேரணியில் இணைந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்கினர்.

இப்பேரணியானது இன்று மாலை மட்டக்களப்பில் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours