(எம்.ஏ.றமீஸ்)

அமெரிக்க நாட்டின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின மூலம் இலங்கைக்கு நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அடிக்கட்டு உரத்தினை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கும் வேலைத் திட்டம் அக்கரைப்பற்றில் இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்திற்கு அமைவாக, அக்கரைப்பற்று மேற்கு கமநல சேவைகள் நிலையத்தின் கீழுள்ள விவசாயிகளுக்கு இவ் இலவச உரம் வழங்கப்படவுள்ளது. இம்முறை சிறு போக நெற்செய்கையில் ஈடுபடவுள்ள சுமார் 3500 விவசாயிகளுக்கு இவ்வாறு இலவச உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீட் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் இலவச அடிக்கட்டு உரம் இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் பதினோராயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்காக விநியோகிக்கப்படவுள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு 22 கிலோகிராம் என்னும் அடிப்படையில் ஆகக்கூடியளவு ஐந்து ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இவ் இலவச அடிக்கட்டு உரம் விநியோகிக்கப்படுகின்றது.
இலவச உரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளின்போது சுமார் 500 விவசாயிகளுக்கு இலவச உரம் விநியோகிக்கப்பட்டதாகவும், தெரிவு செய்யப்பட்ட விவசாயக் குழுக்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் இலவச உரத்தினை விவசாயிகள் உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீட் இதன்போது தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours