(சுமன்)




நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதும் பின்னர் அந்நிதிகள் நிறுத்தப்படுவதும், அல்லது அவை வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றதுமான நிலைமை கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களிலே நிறையவே இடம்பெற்றிருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது கல்முனை உவெஸ்லி பாடசாலைக்கு தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக ஒதுக்கிய நிதி தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

06.05.2020ம் ஆண்டு நான்கு கோடியே முப்பத்து ஐந்து இலட்சத்து முப்பத்து மூவாயிரத்து தொன்னூற்று ஒரு ரூபாய் நிதி கல்முனை உவெஸ்லி பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டிடத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட அந்த நிதிக்கு என்ன நடந்தது என்ற விடயம் தெரியப்பட வேண்டும். அவ்வாறு பல இடங்களில் தொழில்நுடபக் கட்டிடத்திற்காக ஒதுக்கிய நிதிகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்;கின்றன. ஆனால் உவெஸ்லி பாடசாலையில் மாத்திரம் ஏன் அது நிறுத்தப்பட்டது.

அப்பாடசாலையில் இருந்த பழைய கட்டிடம் அகற்றப்பட்;டதற்கும் புதிய கட்டிடத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார். நிச்சயமாக அவ்வாறு இல்லை. தொழில்நுட்ப கட்டிடம் அமைப்பதற்காகவே பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் பாரிய பிரச்சனை நடைபெற்றிருக்கின்றது. தற்போது அந்தக் கட்டத்தை அமைப்பதாக அமைச்சரால் கூறப்பட்டுள்ளது. அதற்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையிலேயே சில விடயங்கள் எமது மாகாணத்திலே நடைபெறுவது வழமை. சில நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதும், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதன் பின்னர் அந்நிதிகள் நிறுத்தப்படுவதும், அல்லது அவை வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றதுமான நிலைமை கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே தமிழ் பிரதேசங்களிலே நிறையவே இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றுள் சிலவற்றை என்னால் குறிப்பிட்டும் கூற முடியும். 2008ம் ஆண்டு நாவிதன்வெளி பிரதேசத்திலே கோட்டக் கல்வி அலுவலகம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அத்திவாரம் இட்டதோடு இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பல விடயங்கள் நடந்திருக்கின்றது. தயவு செய்து எதிர்காலத்திலே இவ்வாறான தவறுகள் கல்வியிலே நடைபெறக் கூடாது என்று தெரிவித்தார்.

இதன் போது அமைச்சரால் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours