(எம்.ஏ.றமீஸ்)
கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணிகளின் கேந்திர நிலையமாக உள்ள பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதியும் கடற்கரைச் சூழலினை அழகு படுத்தும் நோக்கிலும் அறுகம்பே கடற்கரைப் பிரதேசத்தில் சுத்தப்படுத்தும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் பொத்துவில் பிரதேச சபை மூலம் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத் திட்டம் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பொத்துவில் பிரதேசத்தில் உள்ள பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை நல்கியிருந்தன.
கடற்கரைச் சூழலினை சுத்தப்படுத்தும் இவ்வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி மற்றும் அறுகம்பே விஷேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.பி.குணசிறி ஆகியோர் அதிதிகளாய் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
கடற்கரைச் சூழலினைச் சுத்தப்படுத்தி பிரதேச மக்களுக்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் உகந்த சுற்றாடலை கட்டியெழுப்பும் பொருட்டு கடற்கரையினைச் சுத்தப்படுத்தி தூய்மைப் படுத்தும் இவ்வேலைத் திட்டத்தின் போது கடற்கரைப் பிரதேத்தில் உள்ள பல்வேறு கழிவுப் பொருட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, பிளாஸ்றிக் பொருட்டகள், உக்காத கழிவுப் பொருட்கள், உக்கக்கூடிய கழிவுப் பொருட்கள், நீண்ட காலம் சுற்றாடலை மாசுபடுத்தும் கழிவுப் பொருட்கள் போன்றன தரம் பிரிக்கப்பட்டு அவை திண்மக் கழிவு முகாமைத்துவம் செய்யப்படும் வகையில் அப்புறப் படுத்தப்பட்டன.
இதேவேளை கடற்கரைப் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் காணப்பட்ட பல்வேறு இடங்கள் துப்பரவுப் பணியின் மூலம் அழித்தொழிக்கப்பட்டன.
இதன்போது விஷேட அதிரடிப் படையினர், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதாரத் துறையினர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், கிறீன் ஸ்ரீலங்கா அமைப்பினர், தன்னார்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டு கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தில் இணைந்து கொண்டு கடற்கரையினை சுத்தப்படுத்தினர்.
இவ்வேலைத் திட்டத்தின் பின்னர் கடற்கரைப் பிரதேசம் தூய்மைப் படுத்தப்பட்டு, அழகு படுத்தப்பட்டு காட்சி தருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours