Articles by "\"
Showing posts with label \. Show all posts

 நூருல் ஹுதா உமர்


மருதமுனை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் தனியான நகர சபை அமைக்கும் முயற்சியை துரிதப்படுத்தும் நோக்கில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) இரவு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.

மருதமுனையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமையத்தின் பிரதான செயற்பாட்டாளர்களான எம்.ஐ.எம். முஹர்ரப் மற்றும் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர், மருதமுனை பிரதேசத்திற்குத் தனியான நகர சபை அமைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, கல்முனை கரைவாகு மேற்கு மற்றும் பட்டின சபை என நான்கு தனித்தனி நிர்வாக அலகுகளாக இயங்கி வந்த பகுதி, பின்னர் ஒன்றிணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபையாகவும், அதன் பின்னர் கல்முனை மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டது என்றனர்.

முன்னர் கல்முனை கரைவாகு வடக்கு கிராம சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்ட மருதமுனை, தற்போது தனியான நிர்வாக அலகு ஒன்றைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான கோரிக்கையை மருதமுனை மக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூடி, தனியான நகர சபை கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதன்படி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை சந்தித்து ஆலோசனைகளும் அனுபவங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

மருதமுனையில் காணப்படும் மக்கள் தொகை, நிலப்பரப்பு, வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நிர்வாக வளங்கள் என்பன தனியான நகர சபை ஒன்றை அமைப்பதற்கான போதுமான அடிப்படைகளை வழங்குவதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தற்போது கல்முனை மாநகர சபையின் கீழ் கிடைக்கும் சேவைகள் போதுமானதாக இல்லாத நிலையில், மருதமுனைக்கு தனியான நிர்வாக அலகு உருவாக்கப்பட்டால் வீதிகள், வர்த்தக கட்டமைப்புகள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரப் பகிர்வு மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இக்காலகட்டம், மருதமுனையின் கோரிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கச் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மருதமுனையில் இயங்கி வரும் 21 பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத்து பள்ளிவாசல்கள் அமையம், இந்த முயற்சியை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பொதுநல நோக்கத்துடன் முன்னெடுத்து வருவதாகவும், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.

மருதமுனையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மக்களின் நிர்வாகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனியான நகர சபை அமைக்கும் கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அமையத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது சட்ட ஏற்பாடுகள் மற்றும் நகரசபை கோரிக்கைக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் விரிவாக விளக்கமளித்தார்.

 

( வி.ரி.சகாதேவராஜா)


 கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மத்திய முகாம் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பன்னிரண்டாம் கிராமத்தில் விவசாய பாதை ஒன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


அன்னமலை விவசாய போதனாசிரியர் பி.குணநீதராசா வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஎல்எம்.அஸ்மி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன் , கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினோஸ்  அம்மாறை மாவட்ட பிரதி  விவசாய பணிப்பாளர் பி.திஸாநாயக்க உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியியல் இப் பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 

(வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ
முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எனவே ஆகம விதிப்படி 12 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற விதி முறைகளுக்கமைய கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 முதல் 12.00 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலஸ்தாபன குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.

அதன் காரணமாக, இவ் வருட வருடாந்த ஆடிவேல்விழா நடைபெறமாட்டாது. அதாவது உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா,15 நாள் திருவிழாக்கள் மற்றும் தீர்த்தோற்சவம் என்பன இம்முறை நடைபெறமாட்டாது என்று ஆலய வண்ணக்கர் எம்டி. சுதுநிலமே
திசாநாயக்க(சுதா)  தெரிவித்தார்.

எனினும், கதிர்காமத்தோடு ஒத்த ஆடிவேல் விழா உற்சவ காலத்தில்(15-29) பாலஸ்தாபனம் செய்த கூடத்தில் சாதாரண பூஜைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் வழமையான கதிர்காம கானக பாத யாத்திரை வழமைபோல் நடைபெறும் என்று வண்ணக்கர் சுதா மேலும் தெரிவித்தார்.







(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “அகன்று செல்” (Go Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று (18) திங்கட்கிழமை சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் இருக்கின்ற பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். இந்திக தலைமை தாங்கி, முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

செயற்றிட்டத்தின் முக்கிய தொனிப்பொருளாக “அகன்று செல்” – போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதை இது குறிக்கிறது.

போதைப்பொருள் தொடர்பான புகார்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.



ஊர் முழுவதும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் இந்தச் செய்தியை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் பிரதிநிதிகள், பொலிஸார், பிரஜாசக்தி தவிசாளர்கள், சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி ஆதரவு தெரிவித்தனர்.

 


திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டு குளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று  (16) சனிக்கிழமை சுடரேற்றி அஞ்சலி  இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்ட போது...

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா




 

(அஸ்லம் எஸ்.மௌலானா)



சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்திடம் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளிடையான முக்கிய சந்திப்பு சனிக்கிழமை (16) காலை அவரது மாளிகைக்காடு அலுவலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் இவற்றுக்கு முன்னோடியாக தற்காலிக அலுவலக வசதிகள், கனரக வாகன வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் பாராளுமன்ற உறுப்பினரின் வகிபாகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முழுமையான அனுசரணை இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டிய மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள், இதற்கு ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியின் நெருங்கிய தோழராகவும் அதிகாரத்துடன் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி அவர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினர்.

இந்த விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, செயற்படுத்துவதில் தனக்குள்ள பொறுப்புணர்வையும்ஆர்வத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள், இது தொடர்பிலான தனது நடவடிக்கைகளுக்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரதும் சிவில் சமூக அமைப்புகளினதும் முழுமையான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையை தன்னால் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் குறுகிய கால அவசர அழைப்பின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் இந்த விடயம் தொடர்பில் மறுமலர்ச்சி மன்றத்தின் அனைத்து செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகளையும் ஏனைய அமைப்பினரையும் ஒன்றிணைத்ததாக பரந்துபட்ட கலந்துரையாடல் ஒன்றை விரைவில் ஒழுங்கு செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட் குறிப்பிட்டுள்ளார்.


( வி. ரி. சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை  ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் இம் மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது.


 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றம் யூலை 15 ஆம் திகதி நடைபெற்று, தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா இடம்பெற்று , யூலை 29 ஆம் திகதி தீர்த்தம் நடைபெறும் என்று பஞ்சாங்கம் கூறுகின்றது.

இலங்கையின் மிக நீண்ட இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமி எனும் அடியாரை 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம்.

இதுவரை 95 பக்தர்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பாதயாத்திரை வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களினூடாக யாழ்ப்பாணம், ,கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை போன்ற 7 மாவட்டங்களைக் கடந்து செல்லவுள்ளது.

சுமார் 52 நாட்கள், 572 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றது.

இம்முறை  புனித கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதிகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இம்முடிவானது கதிர்காமம் மற்றும் உகந்தையில் இடம்பெறும் இருகட்ட கலந்துரையாடலிலேயே உறுதிசெய்யப்படும்.

எவ்வாறாயினும் இம்முறை காட்டுப்பாதை 2026.07.06தொடக்கம் 2026.07.09 இந்த நாட்களுக்கிடையில் திறக்கப்படும் என்பது உறுதி. 


 சுமன்)

மட்டக்களப்பில் பிரித்தானிய, கனேடிய தூதுவர்களுடன் தமிழ் அரசுக் கட்சி முக்கிய சந்திப்பு...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (04) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக ​தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் மேய்ச்சல் தரை தொடர்பான இழுபறி நிலை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளின் வீழ்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் வை.தினேஸ், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



 


((கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் அருட்சகோதரி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.

இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர், கலந்துகொண்டு  3 ஏ, பெற்று  மாவட்டத்தில் 78 வது இடத்தை பெற்ற அந்தனிசில் ராஜ்குமார் யனுஷ்சிகாவுக்கு சாhன்றுதல் வழங்கி கௌரவித்தனர். 




 

(நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்ட நாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது.
அப்போது, குறித்த விளையாட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீச்சல் தடாகத்தின் சேதமடைந்த நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், பிரதேச விளையாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்மாந்துறை பகுதியில் நீச்சல் விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த சூழல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், ஏ.சி.எம். நயீம், முஹம்மட் ஆசிக், முஹம்மட் ஹாலீத், பஹ்மி சுலைமான், எம்.எல்.ஏ. கபூர் முஹம்மது ரிஸ்விகான், ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதி அப்துல் ஸலாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




 


நூருல் ஹுதா உமர்


அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மாகாண தரப்படுத்தலில், கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 7ஆவது இடத்தில் இருந்த கல்முனை வலயம், இவ்வாண்டு 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இம்முன்னேற்றம் பல்வேறு கல்விசார் அளவுகோள்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மொத்த சித்தி வீதம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், 3A பெறுபேறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 76 ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 88 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 3S தரப்படுத்தல் கணிப்பிலும் முன்னேற்றம் காணப்பட்டதுடன், “W” (தோல்வி) பெறுபேறுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதும் கல்வி தர உயர்வை சுட்டிக்காட்டுகிறது.

இந்த முன்னேற்றம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஸஹதுல் நஜீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவாகும் எனக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வலய மட்டத்தில் நடத்தப்பட்ட தரிசிப்பு நிகழ்ச்சிகள், பாடசாலைகளின் கல்வி செயல்திறனை மதிப்பீடு செய்யும் வெளிவாரி கண்காணிப்பு முறைகள், மற்றும் ஆசிரியர்-மாணவர் செயல்திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை இம்முன்னேற்றத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

இதனையடுத்து, வலய கல்விப் பணிப்பாளர் அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் கல்வியலாளர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். மேலும், 2026ஆம் ஆண்டில் கல்முனை வலயம் இன்னும் உயர்ந்த நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெற்றால், எதிர்வரும் ஆண்டுகளில் கல்முனை வலயம் மாகாண மட்டத்தில் முன்னணி இடத்தைப் பெறும் என்பதில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



(கனகராசா சரவணன்)

 
வெளிவந்த க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சோந்த யூட்நிமால் தம்பதிகளின் புதல்வாரன அனுஸ்ராம் பரீட்சையில்  3 ஏ சித்திகளை பெற்று விஞ்ஞான பாடத்தில் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 

 

( வி.ரி.சகாதேவராஜா)


தமிழ் மக்களின் 60 ஆண்டுகால வருடச் சுழற்சியில் புதிய பராபவ  தமிழ் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 14 இல் பிறக்கிறது.

தமிழ் மக்களின் பாரம்பரிய திருநாளான சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி 2026 ஆண்டிற்கான முக்கிய நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சித்திரைப் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

 அன்றைய தினம் அதிகாலை 4.40 மணி முதல் நண்பகல் 12.40 மணி வரை விசு புண்ணிய காலமாகும். 
அக் காலத்தில் மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்தல் நல்லது.

புத்தாண்டு பிறக்கும் நேரம் அதே நாள் காலை 8 மணி 40 நிமிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதனை முன்னிட்டு மக்கள் வழக்கமான முறையில் சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.


அந்நாளில் அணிய வேண்டிய ஆடை மற்றும் ஆபரணங்கள் குறித்தும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

 சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகள் அணிவது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், பவளம் மற்றும் வைரம் போன்ற ஆபரணங்கள் அணிவதும் நல்லதாக கூறப்பட்டுள்ளது.

கைவிசேட நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14 அன்று காலை 8.47 மணி முதல் 9.04 மணி வரை மற்றும் பகல் 11.46 மணி முதல் 12.06 மணி வரை சிறந்த நேரமாகும். மேலும், ஏப்ரல் 15 அன்று காலை 9.04 மணி முதல் 9.55 மணி வரைவும் நல்வேளையாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் சங்கிரமதோஷ நாட்களில் திருவாதிரை, புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் 4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆகிய நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்த அறிவிப்புகள் அடிப்படையில் மக்கள் புத்தாண்டு நாளை சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

 

நூருல் ஹுதா உமர்

அம்பாறை, 28 மார்ச் 2026 – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2026 மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) என்ற தலைப்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயிற்சி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு உலக தரமான புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை வழங்கியது.

இந்த தேசிய அளவிலான திட்டத்தை இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம் (ADRMP) தலைமையில், கொழும்பு பல்கலைக்கழகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் முன்னெடுத்தது. திட்டத்தை அமெரிக்க மாநிலத் துறை பழைய மாணவர்களான டாக்டர் நோவில் விஜேசேகர மற்றும் டாக்டர் அஸ்லம் சாஜா வடிவமைத்து வழிநடத்தினர்.

பயிற்சி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையினால் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அனுமதியுடன், பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் (அனர்த்த தடுப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்) மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் ஒருங்கிணைத்தனர்.

தொடக்க விழாவில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், நகர மையங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கும் இத்தகைய நவீன தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டு, தொழில்நுட்ப அறிவும் அனர்த்த முகாமைத்துவ திறன்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தமது உரையில், பல்துறை ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக்காட்டி,
“இன்றைய உலகில் கல்வியும் பிரச்சினை தீர்வும் பல்துறை அணுகுமுறையில் தான் அமைகின்றன. Geo-AI போன்ற புதிய துறைகள் அனர்த்த எதிர்ப்புத் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்க முக்கிய பங்காற்றும்,” எனக் கூறினார்.

ADRMP செயலாளர் மேனக விஜேசிங்க, இளைஞர்களின் பங்கு அனர்த்த முகாமைத்துவத்தில் மிக முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சியில் சுமார் 20 மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனியா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

ArcGIS தளத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியை GIS Solutions (Pvt) Ltd நிறுவன நிபுணர்கள் முன்னெடுத்தனர். GIS ஆதரவு பகுப்பாய்வாளர் கணிஷ்க நடீஷன், மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்குவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.

முதல் நாள் அமர்வுகளில் GIS அடிப்படைகள், பேரிடர் மேலாண்மை, Geo-AI ஒருங்கிணைப்பு, புவியியல் தரவுகள், ArcGIS Pro அறிமுகம், ஒருங்கிணைப்பு அமைப்புகள் (CRS), மற்றும் ஆழ்மையான கற்றல் கருவிகள் கற்பிக்கப்பட்டன. Geo-AI தொடர்பான புதுமை பணிப்பயிற்சியும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நடைமுறை அமர்வுகளில் பட வகைப்பாடு (Image Classification), பொருள் அடையாளம் காண்தல் (Object Detection), Geo-AI தரவு தயார் செய்தல், வெள்ளப் பகுப்பாய்வு, மாதிரி துல்லிய மதிப்பீடு மற்றும் Model Builder தானியக்க செயல்முறை கற்றுக்கொடுக்கப்பட்டது.

பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், ட்ரோன் தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைப்பதன் மூலம் அனர்த்த காலங்களில் விரைவான தரவு சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் எளிதாகும் என்று விளக்கியார். குறிப்பாக வெள்ள பாதிப்புகளில் Geo-AI பயன்பாடு உயிர்களை காப்பாற்ற உதவும் என அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சியை கணிஷ்க நடீஷன், தேஷன் செல்லஹேவா, மினூஷியா ஹசரங்க, அமிஷா பிரத்தியங்க முன்னெடுத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தில்ஷான் லேகம், ரசாங்கனி மதுபானி மற்றும் ரஷ்மினி வாசனா பங்கேற்றனர்.

“Geo-AI for Disaster Resilience” முயற்சி, மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனர்த்த முகாமைத்துவத்தில் செயல்படக்கூடிய திறமையான நிபுணர்களை உருவாக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

பல்துறை கலாசார பின்னணிகளை உடைய மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அறிவு பகிர்வு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைக்கும் முன்மாதிரியாக பரவலாக பாராட்டப்பட்டது.



 


மட்டக்களப்பு துறைநீலாவணை உச்சிமா காளியம்மன் ஆலய பங்குனி உத்தர திருச்சடங்கு 26 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெற இருக்கின்றது28 ஆம்திகதி சனிக்கிழமை அம்மன் ஊர்வலமானது துறைநீலாவணை மற்றும் துரைவந்தியமேடு கிராமங்களுக்குச் செல்ல இருப்பதுடன் 1ஆம்திகதி புதன்கிழமை சமூத்திரநீராடல் வட்டுக்குத்துதல் தீமூட்டுதல்  போன்ற விசேட நிகழ்வுகளுடன் 2 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகால தீமிதிப்பு வைபவமும் இடம்பெற இருப்பதுடன் பூசை ஒழுங்குகள் பூசகர் பொன்னுத்துரை சிவம் ஐயா தலைமையில் உதவிப்பூசகர் ம.தினேஸ் ஆகியோரும் திருவிழாவுக்கான ஒழுங்குகளை  ஆலயத் தலைவர் நாகலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் மேற்கொண்டு வருகின்றார்

 


 நூருல் ஹுதா உமர்

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வினைத்திறனாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் சனிக்கிழமை (14) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பணிப்பாளர் மேற்படி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், மல்வத்தை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல்.குடாபடு மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், வைத்தியசாலையில் தற்போது நிலவும் அத்தியாவசியத் தேவைகள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்து, வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் விஜயம் செய்த பணிப்பாளர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன், வைத்தியசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட அவசரத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

வைத்தியசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வரும் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களையும் பணிப்பாளர் இதன்போது பாராட்டினார்.


 

( வி.ரி. சகாதேவராஜா)

அனுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. 
மக்கள் எம் பக்கமே.

இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா காரைதீவில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (12 ) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் ஏற்பாட்டில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
தித்வா பேரிடரில் பாதிக்கப்பட்ட எமது இலங்கைக்கு 49 நாடுகள் உதவி வருகின்றன. அதற்கு காரணம் ஜனாதிபதி அருணகுமார மற்றும் ஆட்சி மீதான பூரண நம்பிக்கை.

அம்பாறை மாவட்ட கரையோரத்தில் 125 கிலோமீட்டர் தூரம் கடலரிப்பு இடம்பெறுகிறது. அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான பாராளுமன்ற குழுக் கூட்டம் இவ்வாரத்தில் நடைபெறவிருக்கிறது.
கடந்தாண்டு காரைதீவு பிரதேசத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 
காரைதீவு மைதானம் மற்றும் அரங்கு திருத்தம் செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், காரைதீவு பிரதேசசபை பதில் தவிசாளர் ஏஎல்எம்.இஸ்மாயில், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.இராஜகுலேந்திரன் மற்றும் கணக்காளர் திருமதி ஹஸ்மியா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர் ,பிரதேசசபை உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள் , எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திகள், கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆராயப்பட்டதுடன் காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்வி ,சுகாதாரம், குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, மைதானம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

அத்துடன் 2026ம் ஆண்டுக்கான திட்ட வரைபுகளும் முன்மொழியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





 

நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு ஒன்று நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு நாவிதன்வெளி சுமங்கலா மண்டபத்தில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தின் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் தர்மதாஸ ஆரியதாச ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் உரையாற்றிய அவர்கள், இவ்வாறான மத சார்பற்ற ஒன்றுகூடல்கள் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டனர்.
மேலும், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே. புவனரூபன், சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் பி. சதீஷ்கரன், சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டு நோன்பின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய உரைகளையும் விசேட பிரார்த்தனைகளையும் நடத்தினர்.
ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.