(எம்.ஏ.றமீஸ்)

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் நடமாடும் சமூக சேவைகளும்  விஷேட மருத்துவ முகாம்களும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வேலைத் திட்டத்திற்கு அமைவாக, பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள செங்காமம் கிராமத்தில் குறித்த சமூக சேவை நிகழ்வும் விஷேட மருத்துவ முகாமும் இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வின்போது சுகாதாரத் துறையினர், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
இதன்போது சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு, வெளிநோயாளர் மருத்துவ சேவை, இரத்தப் பரிசோதனை, விஷேட பல் மருத்துவ சேவை,  தோற்றா நோய் தொடர்பிலான மருத்துவ ஆலோசனை சேவைகள், விஷேட தேவையுடையோருக்கான உதவிக் கொடுப்பனவு மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் போன்ற பல்வேறு சேவைகள் இடம்பெற்றன. இதன்போது பல நூற்றுக் கணக்கான பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக காணப்படும் பிரதேசங்களில் வசித்து வரும் கிராம மக்களின் நலனை கருத்திற் கொண்டு இவ்வருடம் இம்மாகாணத்தில் 33  நடமாடும் மருத்துவ மற்றும் சமூக சேவைகள் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours