அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கு 20 பயிலுனர்களை மாத்திரம் சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தனது முயற்சி காரணமாக கல்வி அமைச்சரின் தலையீட்டினால் 60 பேரை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்;
2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்குரிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு ஆசிரியப் பயிற்சிக்காக பயிலுனர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2023.07.22 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
அதில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கு இஸ்லாம் பாடநெறிப் பயிற்சிக்காக 20 மாணவர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் வருடாந்தம் 25 - 30 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு வருடத்திற்குமாக மொத்தம் 20 மாணவர்களை மாத்திரம் அனுமதிப்பதானது பெரும் அநீதியான விடயம் என்பதை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை சந்தித்து சுட்டிக்காட்டியதுடன் இவ் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினேன்.
இதனை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சர், இரண்டு வருடங்களுக்குமாக 60 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும் குறித்த 60 மாணவர்களையும் வெவ்வேறு கல்விக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்தது. அதனால் மீண்டுமொரு தடவை கல்வி அமைச்சரை சந்தித்து, நிலைமையை விபரித்ததையடுத்து 60 பேரையும் அட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்படவிருந்த பாரிய அநீதியை களைவதற்காக உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கும் தனது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரபுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பைசல் காசிம் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours