கணித பாடம் ஒரு கஷ்டமான பாடமே அல்ல.  எனது லட்சியம் வைத்தியராக வருவது. என்று இம்முறை தேசிய ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற கிழக்கு மாகாண மல்வத்தை மாணவி சிவரூபன் ஜினோதிகா தெரிவித்தார்.



கல்வி அமைச்சு நடாத்திய சர்வதேச ஒலிம்பியாட் கணித    போட்டியில் தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவி செல்வி சிவரூபன் ஜினோதிகா தங்கப் பதக்கம் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (14) திங்கட்கிழமை மாலை இப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன.

கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற தேசிய போட்டியில் பிரிவு இரண்டில் யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயம் வித்தியாலய மாணவன் ஆர்.ஆருஜன் 50 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்தார்.

45 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவி செல்வி சிவரூபன் ஜினோதிகா தங்கப் பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளார்.

இது சம்மாந்துறை வலயத்தில் சர்வதேச ஓலிம்பியாட் சரித்திரத்தில் தங்கம் பெற்ற முதல் சாதனையாகும்.

அவரிடம் நேரடியாக கண்ட நேர்காணல் இதோ..


*முதலில் தங்கள் குடும்பம் பற்றி கூறுங்கள்?

நான் மல்வத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்.எனது தந்தை சிவரூபன், தாய் பிரபாஜினி .நான் குடும்பத்தில் மூத்த பிள்ளை நான். எனக்கு ஒரேயொரு தங்கை நிருஷ்டிகா. வயது 4
தந்தையார் ஒரு கூலித் தொழிலாளி.


*தங்கள் கல்வி பற்றி கூறவும்?

நான் முதலாம் வகுப்பில் இருந்து இதுவரைக்கும் மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றேன்.

*ஒலிம்பியாட் அனுபவம் பற்றி சொல்லுங்கள்! 

தரம் ஆறு ஏழு வகுப்புகளில் கொரோனா காலகட்டம் ஆகையால் பரீட்சைகள் இடம் பெறவில்லை. இம்முறை தான் முதன் முதலில் கணித ஒலிம்பியாட் பரீட்சையில் தோற்றினேன். தேசிய பரீட்சை கொழும்பு ஆனந்த கல்லூரியில்  நடைபெற்றது . புது அனுபவமாக இருந்தது.


*பரீட்சையில் இப்படி தங்கம் வென்று சாதனை புரிவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?

 உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.  முன்பெல்லாம் மாகாண மட்டத்தில் நடைபெற்ற பரீட்சையில் நான் 90 புள்ளிகளை பெற்றிருந்தேன். ஆனால் இம்முறை இவ்வாறு 45 புள்ளிகள் பெற்றது கவலை. தேசிய மட்டத்தில் இவ்வாறு தங்கப்பதக்கம் பெறுவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை.


*இந்த சந்தர்ப்பத்தில் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?

 என்னை படைத்த இறைவனுக்கு முதலில் நன்றி .எனது பெற்றோர்கள் அதிபர் ஆசிரியர் பயிற்சி தந்த ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.


*ஒலிம்பியாட்  போட்டிக்கென  விஷேடபயிற்சி எடுத்தீர்களா ?

அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை .  எனது வகுப்பிலும் பாடசாலையிலும் எனக்கு பயிற்சி வழங்கப்பட்டது.தனியார் வகுப்பு ஒன்று சிவதர்ஷினி என்கின்ற ஆசிரியையிடம் ஏனைய மாணவர்களுடன் சென்றேன் . அவர் என்னிடம் பணமே பெறுவதில்லை .மாறாக ரியூட்டுகள் கடந்த கால வினாப் பத்திரங்கள் அத்தனையும் தந்து என்னை பயிற்சி அளித்தார்.  .அதுவே இந்த வெற்றிக்கு காரணம் என்று நினைக்கின்றேன்.

* கொழும்பு சென்று வந்த அனுபவத்தை கூறுங்கள்?

தந்தை தாயுடன் நான் கொழும்புக்கு சென்று வந்தேன் . கொழும்பு செல்வதற்கு பாடசாலை ஆசிரியர்கள் தான் உதவினார்கள் . இப்போது பத்து நாள் பயிற்சிக்கு எவ்வாறு கொழும்பு செல்வது என்று யோசிக்கிறேன்.

*ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்?

ஏலவே கொழும்பு சென்று வருவதற்கு ஆசிரியர்கள் உதவினார்கள். இது 10 நாள் என்கின்ற பொழுது நான் செலவுக்கு என்ன செய்வது? என்று யோசிக்கின்றேன். அப்பா கூலி தொழிலாளி. அதுதான்.

"உங்களுக்கு கணிதத்தில் எவ்வாறு ஆர்வம் வந்தது?

எனக்கு ஆறாம் வகுப்பு முதல் கணிதத்தில் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எல்லாப் பரீட்சைகளில் கணித பாடத்தில் 100 புள்ளிகள் கிடைத்தது. வகுப்பிலே முதல் பிள்ளையாக வருவேன்.

 *எதிர்கால லட்சியம் என்ன?

எனக்கு கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களில் விருப்பம். எனினும் எனது எதிர்கால லட்சியம் வைத்தியராக வருவது.

*சர்வதேசத்திற்கு செல்ல இருக்கிறீர்கள் இந்த மனநிலையில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?

 நான் மேலும் படித்து முன்னேற வேண்டும்.  ஏனைய மாணவர்களும் கணித பாடத்தை கஸ்டம் என்று கணிக்காமல் இலகுவாக எடுத்து க்கொண்டு பயிற்சிகளை செய்து கல்வியிலே முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர் சகா







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours