மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சர் கீதா குமாரசிங்க அவர்களை கல்முனையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் கனிஷ்ட புதல்வி சட்டத்தரணி மரியம் நளிமுதீன் அவரது அமைச்சில் சந்தித்தார்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம், சுய தொழில் வாய்ப்புகள், வீட்டில் நடத்தும் சிறு வணிக கடனுதவிகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “அஸ்வசுவ” போன்ற பல திட்டங்கள் பற்றி சட்டத்தரணி மரியம் நளிமுதீன் அமைச்சருக்கு விரிவாக விளக்கினார்.
இதனை செவிமடுத்த அமைச்சர் உரிய அதிகாரிகளை அழைத்து ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனினால் கிழக்கின் சார்பாக முன்வைக்கப்பட்ட இவரின் கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
இலங்கை சனத்தொகையில் 52% பெண்கள். ஆனால், நாடாளுமன்ற பிரதிநிதிகள் 225 பேரில், பெண்கள் 12 பேர் மட்டுமே என வருத்தத்துடன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர் சந்திக்கும் முதலாவது பெண் சட்டத்தரணி மரியம் நளிமுதீன் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஆற்றலும் திறமையும் மிக்க ஆயிரமாயிரம் பெண்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். பல தேவைப்பாடுகள் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்களை வந்து சந்தியுங்கள், பேசுங்கள், உதவிகள் புரியுங்கள் என சட்டத்தரணி மரியம் நளிமுதீன் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours