( வி.ரி.சகாதேவராஜா)

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொதுமுகாமையாளரும் எழுத்தாளருமான  ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மகராஜ் எழுதிய "இந்து மதம் ஒரு பார்வை " என்ற நூல் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது.

ராமகிருஷ்ண மிஷன்  மட்டக்களப்பு, சுவாமி விவேகானந்தரின் இலங்கை வருகையை ஒட்டி 125 ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடும் முகமாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

உலகளாவிய ராமகிருஷ்ணமடம் மற்றும் ராமகிருஷ்ணமிஷனின் துணைத் தலைவரும் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான அதிவண. ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த ஜீ மகராஜ் அவர்களால் அந்நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது .


இந்த நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் கொழும்பு முன்னாள் தலைவர் சுவாமி சர்வரூபானந்தாஜி மகராஜ் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் கொழும்பு உப தலைவர் சுவாமி அக்‌ஷராத்மானந்தஜி  மகராஜ் அவர்கள் மற்றும் துணை பொது தலைவரின் செயலாளர் சுவாமி யாதவேந்ரானந்தஜி மற்றும் சுவாமி சுரார்சிதானந்தஜி ஆகியோர் கலந்து கொண்டனர் .

.
கடந்த மூன்று ஆண்டுகளாக இ.கி.மிசன் வெளியிட்டு வரும் இராமகிருஷ்ண விஜயத்தில் சுவாமி நீலமாதவானந்தா ஜீ " அறிந்து கொள்வோம் சனாதன தர்மத்தை" என்ற தலைப்பில்  தொடராக எழுதிவந்த ஆன்மீக கட்டுரைகள் 37 இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியா சென்னை மயிலாப்பூர்  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட இந்த நூல் இந்து மதத்தின் பல்வேறு சாஸ்திரங்களையும் பல்வேறு பிரிவுகளையும் ஆராய்கிறது.

37 கட்டுரைகளையும் 10 உப இணைப்புகளையும் கொண்ட இந்த நூல் ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேயர் தி. சரவணபவன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாநிதி பத்ம ராஜா ,கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் மா.செல்வராஜா மற்றும் வர்த்தக பிரமுகர்கள் அரசு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷினுடன் நூறாண்டுகளாக பயணிக்கும் 26 நிறுவனங்களுக்கு பாராட்டு பத்திரமும் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

 இதேவேளை, எழுத்தாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ ,முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் தொடர்பாக நீண்ட ஒரு ஆவண பெட்டகத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours