(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெறும் டியூசன் வகுப்புகளை முறையாக ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (31) மாநகர சபை கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் நெறிப்படுத்தலில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் உட்பட அதிகாரிகள் பலரும் தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், நடத்துனர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தற்கால சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் கருத்திற் கொண்டு முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை நேரங்களில் எக்காரணம் கொண்டும் டியூசன் வகுப்புகள் நடத்தப்படக் கூடாது.
ஞாயிறு தினங்களில் அஹதியா மற்றும் அறநெறிப் பாடசாலை நடைபெறும் நேரத்திலும் டியூசன் வகுப்புகள் நடத்தப்படக் கூடாது.
தரம்-1 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான டியுசன் வகுப்புகள் மாலை 6.00 மணியுடன் முடிவுறுத்தப்பட வேண்டும்.
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான டியூசன் வகுப்புகள் மாலை 6.30 மணியுடன் முடிவுறுத்தப்பட வேண்டும்.
இம்முறை தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான டியூசன் வகுப்புகளை மாத்திரம் எதிர்வரும் செப்டெம்பர்-30 ஆம் திகதி வரை இரவு 9.00 மணி வரை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் சுகாதார மற்றும் காற்றோட்ட சூழலைக் கொண்டிருப்பதுடன் அங்கு கட்டாயம் ஆண், பெண்களுக்கென தனித்தனியான மலசல கூடங்கள் அமையப் பெற்றிருத்தல் வேண்டும்.
இட நெருக்கடியற்ற வகையில் போதிய தளபாட வசதிகள் இருத்தல் வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான விதிமுறைகளை மீறும் டியூட்டரிகளின் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்படாத டியூட்டரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது மாநகர ஆணையாளரினால் அறிவுறுத்தப்பட்டது.
அதேவேளை தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பில் அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பதென இதன்போது முடிவு செய்யப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours