(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.
பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும் 24.10.2023 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான மக்களை நோக்கிய பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில், மக்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி சிறந்ததொரு சாத்தியப்பாடான பட்ஜெட்டை தயாரித்து, மாநகர சபையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படுவதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours